எஸ்.பி.பி-க்கு சிலை வைக்க கோரிக்கைவைத்தால் உரிய நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

எஸ்.பி.பி-க்கு சிலை வைக்க கோரிக்கைவைத்தால் உரிய நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு சிலை வைக்குமாறு கோரிக்கைவைத்தால் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அண்மையில் நடைபெற்ற 2021- 23 ம் ஆண்டிற்கான திரைப்பட இசைக் கலைஞர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா சென்னை வடபழனி இசைக் கலைஞர்கள் சங்கக் கட்டத்தில் நடைபெற்றது. இசையமைப்பாளர் தினா சங்கத்தின் தலைவராகவும், ஜோனாபக்தகுமார் பொதுச்செயலாளராகவும், மகேஷ் பொருளாளராகவும் பொறுப்பேற்று கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நடிகர் பாக்யராஜ், பாடகர் எஸ்.பி.பி.சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘உலகளவில் தன் பாடல்கள் மூலம் தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்த நிகழ்வில் நான் கலந்து கொள்ள உள்ளதாக முதல்வரிடம் இன்று கூறினேன். அதற்கு முதல்வர், எஸ்பிபிக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை நேரில் சென்று பெற அவர் உயிருடன் இல்லையே என்ற ஆதங்கமும், வருத்தமும் தமக்கு இருப்பதாக. தான் கூறியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறச் சொன்னார்.

    எஸ்.பி.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், தினம்தோறும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரிப்பார் முதல்வர். இரண்டு முறை அமைச்சர் விஜயபாஸ்கரை மருத்துவமனைக்கு நேரில் அனுப்பியிருந்தோம். அவரது பாடலில் கூறியவாறு 'என்றும் இசையாய் நம்மிடம் வாழ்ந்து கொண்டிருப்பார்’.

    எஸ்.பி.பிக்கு சிலை வைக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரோ, திரைப்படச் சங்கத்தினரோ கோரிக்கை விடுத்தால் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி இசைக்கலைஞர்கள் சங்க கட்டத்தில் எஸ்பிபி க்கு சிலை வைக்க முதல்வர் மூலம் நல்ல தீர்வு காணப்படும். அரசின் செலவில் எஸ்பிபிக்கு சிலை வைக்க முயற்சி எடுக்க துறைரீதியாக நான் தயார்.

    எஸ்.பி.பி இறந்த செய்தி வெளியான உடனேயே அவரது இறுதிச் சடங்கில் அரசு சார்பில் மரியாதை செய்யப்பட வேண்டும் என பலரும் என்னை தொடர்பு கொண்டனர். அரசின் கடமை அது. எஸ்.பி.பி பெயரில் அறக்கட்டளை தொடங்கினால் தமிழக அரசு அதற்கு துணையாக நிற்கும்’ என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய நடிகர் பாக்யராஜ், ‘திறமை, செயல்பாடு இரண்டிலும் சிறந்த மனிதர் எஸ்.பி.பி. விளம்பர நோக்கம் இல்லாமல் பல பாடகர்களுக்கு உதவியவர். நேர்மறை எண்ணம் கொண்டவர் அவர். காசு கொடுக்காமல் வாக்கு வாங்கி தினா வெற்றி பெற்றுள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட பலரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக என்னிடம் சில வாக்காளர்கள் நேரில் வந்து கூறினார்கள்’ என்று தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார், ‘எஸ்.பி.பி படத்திறப்பும், புதிய நிர்வாகிகள் பதவியேற்பும் ஒரே மேடையில் நடந்துள்ளது. 50,000 பாடல் பாடிய அந்த மகா கலைஞன் தலைக்கனம் இல்லாமல் வாழ்ந்தவர்" என்று கூறினார்.

    முன்னதாக எஸ்.பி.பியின் திருவுருவ படத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ, திரை இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா ஆகியோர் திறந்து வைத்தனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: