மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சிலை முறைகேடு தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், புன்னை வனநாதர் சந்நிதியில் கடந்த 2004-ம் ஆண்டு பார்வதி தேவியுடன் கூடிய மயில் சிலைகள் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக புதிய சிலை வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிலை மாற்றப்பட்ட நேரத்தில், திருமகள் கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலராக இருந்தார்.
இந்த நிலையில் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஸ்தபதி முத்தையா, மற்றும் செயல் அலுவலர் திருமகள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள்
இவ்வழக்கில் கைதான ஸ்தபதி முத்தையாவிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. செயல் அலுவலர் திருமகள் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தொடர்ந்து, சிலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட திருமகளிடம் விசாரணை நடத்த, வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர்.
அப்போது, அவர் தலைமறைவானது தெரியவந்ததால் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில், திருமகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் நேற்று கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, சிலை கடத்தல் வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்கப்படும் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு அவர் கொண்டுவரப்பட்டார். நேற்று ஞாயிற்றுகிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதி இல்லத்தில் பெண் அதிகாரி திருமகள் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து திருமகள் திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது அந்தத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also see... பழைய பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.