மதுபான ஆலைகளில் வருமானவரி சோதனை - ₹1120 கோடி பதுக்கல் கண்டுபிடிப்பு

மதுபான ஆலைகளில் வருமானவரி சோதனை - ₹1120 கோடி பதுக்கல் கண்டுபிடிப்பு
  • Share this:
எஸ்.என்.ஜே. மற்றும் கல்ஸ் மதுபான ஆலைகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 1120 கோடி ரூபாய் பதுக்கியதும் 450 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆணிவேர் வரை பாய்ந்த ஐ.டி அதிகாரிகளின் 6 நாள் சோதனை:

2009-ஆம் ஆண்டு அனுமதி பெற்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ். தமிழகத்தைச் சேர்ந்த என் ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமான இந்த நிறுவனத்தின் ஆலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. தமிழகத்தின் மது தேவையில் 15 விழுக்காட்டை நிறைவேற்றுமளவு முக்கிய நிறுவனமாகத் திகழுகிறது. கேரளா, கோவா, மேற்கு வங்கம், ஒடிசா, புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உயர் ரக மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறது.


மதுபான தயாரிப்பு மட்டுமன்றி, லாட்டரி, சினிமா தயாரிப்பு, சர்க்கரை என பல தொழில்களையும் மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் பங்குத்தராகவும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்து வருவதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதைத் தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள நிறுவன தொடர்புடைய 55 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் தியாகராயர் நகர், சி.ஐ.டி. காலனியில் உள்ள எஸ்.என்.ஜே நிறுவனத்தின் தலைமை அலுவலகங்களில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அரசுக்கு மதுபானம் வினியோகிக்கும் ஒப்பந்ததாரர் என்பதால் வரி ஏய்ப்பு விவகாரத்தில் அரசியல் புள்ளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என விசாரணை நடைபெற்று வந்தது.வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணையில், எஸ்.என்.ஜே மதுபான ஆலையுடன் கல்ஸ் மதுபான ஆலையும் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொடுக்கல், வாங்கலில் தொடர்பில் இருந்த இந்த இரண்டு நிறுவனங்கள் மாறி மாறி மூலப்பொருட்கள் வாங்குதாகக் கூறி போலிக் கணக்குகள் காட்டியதும் அம்பலமானது.

எஸ்.என்.ஜே. ஆலை 100 கண்டெய்னரில் மூலப்பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டிய நிலையில், ஒவ்வொரு கண்டெய்னரின் எண் உள்ளிட்ட தகவல்களை திரட்டி விசாரணையை தீவிரப்படுத்தியது வருமான வரித்துறை.

இந்த விசாரணையில் 10 கண்டெய்னரில் மட்டுமே மூலப்பொருட்கள் வாங்கியது அம்பலமானது. இதன் மூலம் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை திரட்டி, அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

பணப்பரிவர்த்தனையில் எஸ்.என்.ஜே மதுபான ஆலையுடன் கல்ஸ் மதுபான ஆலையும் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், அந்நிறுவனத்தையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

தில்லுமுல்லு மூலம் வரி ஏய்ப்பு:

மலிவான விலையில் பொருட்களை வாங்கி, மதுபானம் தயாரிப்பதில் அதிக செலவுகளைக் காட்டியும், தரமற்ற பொருட்களுக்கு அதிக அளவில் விலை நிர்ணயம் செய்வது போன்ற தில்லுமுல்லு மூலம் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 6ஆம் தேதி எஸ்.என்.ஜே ஆலையில் தொடங்கிய சோதனை, கல்ஸ் மதுபான ஆலை வரை தொடர்ந்து நேற்றுடன் நிறைவு பெற்றது.

6 நாட்களில் முதல் இரண்டு நாட்கள் எஸ்.என்.ஜே ஆலையில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அடுத்த 4 நாட்கள் கல்ஸ் மதுபான ஆலையில் நடந்தது. இந்த 6 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆலையின் அடிநாதம் வரை சென்று ஒவ்வொரு கணக்கு விபரங்கள், ஆவணங்கள் என அனைத்தையும் அதிகாரிகள் சரிபார்த்துள்ளனர்.

சோதனையின் நிறைவில் இந்த இரண்டு நிறுவனங்களும் 1120 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், 450 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும் இரண்டு நிறுவனங்கள் ஒத்துக் கொண்ட நிலையில், எஸ்.என்.ஜே நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் காரில் இருந்த 4 கோடியும், அலுவலகத்தில் இருந்த 80 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இரண்டு மதுபான நிறுவனங்களின் 30 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை எடுத்துச் சென்று சரிபார்த்த பிறகு இரண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்