"கைராசி மீது நம்பிக்கை இல்லை; உழைப்பை நம்புகிறேன்" - உதயநிதி ஸ்டாலின்

"கைராசி மீது நம்பிக்கை இல்லை; உழைப்பை நம்புகிறேன்" - உதயநிதி ஸ்டாலின்

ராசி பார்த்து எல்லாம் வந்துவிட முடியாது என்றும், உழைப்பதால் என் வண்டி ஓடுகிறது என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

  • Share this:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, கடந்த ஆண்டு "கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்" போட்டி நடத்தப்பட்டது. இதில் 28 நாடுகளில் 106 முக்கிய நகரங்களில் இருந்து 8 ஆயிரத்து 541 பேர் பங்கேற்றனர். இந்தியாவில் 12 மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டனர். அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த மாரத்தான் போட்டிக்கான முன்பதிவை தொடங்கிவைத்து, பங்கேற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்.

அதேபோல், கருணாநிதியின் 3-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, இந்த ஆண்டும் கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான் போட்டியை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருக்கிறார். இதில் பங்கேற்பவர்களுக்கான முன்பதிவு தொடங்கியது. அதனை தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., சென்னை மெரினா கடற்கரையோரம் அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவு இல்லத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், தயாநிதிமாறன் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்பதிவை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின், முதலில் முன்பதிவு செய்த 12 பேருக்கு அதற்கான ரசீதை வழங்கினார். மாரத்தான் போட்டிக்கு முன்பதிவு செய்வதற்கு ரூ.300 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பதிவின் மூலம் வரும் தொகையை கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க திட்டமிட்டு இருக்கின்றனர்.

Also read: உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மீண்டும் ஆலோசனை!

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 5, 10 மற்றும் 21 கி.மீ. ஆகிய 3 பிரிவுகளில் எதிலாவது ஒன்றில் பங்கேற்று, அதற்கான செயலியில் குறிப்பிட்ட கி.மீ. தூரம் ஓடியதற்கான பதிவை "ஸ்கிரீன்சாட்" எடுத்து முன்பதிவு செய்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பதிவு செய்த உடனேயே அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதில் பங்கேற்றவர்களுக்கான பதக்கங்கள் 38 மாவட்டங்களில், அமைச்சர்கள் மூலமாக வழங்கப்படும். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து பங்கேற்பவர்களுக்கு கூரியர் மூலமாகவும், வெளிமாநிலங்களில் இருந்து பங்கேற்றால் தபால் மூலமும் பதக்கங்கள் அனுப்பப்பட இருக்கின்றன.

கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி முன்பதிவை தொடங்கிவைத்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

அமைச்சர் மா.சுப்பிரமணியன், என்னை கைராசிக்காரர் என்று சொன்னார். எனக்கு கைராசி மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பு மீது நம்பிக்கை இருக்கிறது. ராசி பார்த்து எல்லாம் வந்துவிட முடியாது. உழைப்பதற்கு என்னால் முடிவதால் என் வண்டி ஓடுகிறது.

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு நீங்கள் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறீர்கள். நான் படப்பிடிப்புக்கு செல்வதற்காக உடற்பயிற்சி அதிகம் செய்யவேண்டும். ஆனால் என்னால் அது முடிவதில்லை. இப்படி இருக்கையில் மா.சுப்பிரமணியன் ஓடுவது, அதுதொடர்பான அவருடைய வீடியோக்களை பார்க்கும்போது எனக்கு வியப்பாக இருக்கும். துடிப்பாக அரசியல் பணிபுரியும் அவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று நினைக்க தோன்றும்.

சென்னை மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் ஓடிக்கொண்டிருந்தார். இப்போது ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகளையும் சேர்த்துக்கொண்டு ஓடுகிறார். அந்த அளவுக்கு பிரமிப்பான அமைச்சராக இருக்கிறார். கலைஞர் நினைவிடத்தில் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைப்பது மகிழ்ச்சியை தருகிறது. பெருமையை கொடுக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆண்டு இந்த போட்டியின் முன்பதிவு மூலம் வந்த தொகையான ரூ.23 லட்சத்து 41 ஆயிரத்து 726-ஐ கடந்த அரசின் நிதிசெயலாளரிடம் கொடுத்தோம். இந்த முறை நம்முடைய தலைவரிடம் நேரடியாக கொடுக்க இருக்கிறோம். ஆனால் இந்த தொகை போதாது. எனவே அதிகமானோர் இதில் முன்பதிவு செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து கலைஞர் நினைவுநாளையொட்டி நடந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று, வேலைவாய்ப்பை பெற்றவர்களுக்கு உறுதியாணையை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
Published by:Esakki Raja
First published: