Home /News /tamil-nadu /

நான் யாரையும் ’சின்னவர்’ என்று அழைக்க சொல்லவில்லை.. கலைஞரை சிறுமைப்படுத்துகின்றனர் - உதயநிதி

நான் யாரையும் ’சின்னவர்’ என்று அழைக்க சொல்லவில்லை.. கலைஞரை சிறுமைப்படுத்துகின்றனர் - உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Udhayanithi Stalin : இளைஞர் அணி செயலாளராக 3 ஆண்டுகள் முடித்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறேன். இன்னும் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக மிக அதிகம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    நான் யாரையும் ’சின்னவர்’ என்று அழைக்க சொல்லவில்லை என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

    சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். 1600 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பொற்கிழி வழங்கும் நிகழ்வு நடந்தது. திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகளை வழங்கினார்.

    பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நான் மிகவும் ராசிக்காரன் என ஆர்.எஸ்.பாரதி கூறினார். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் வாக்குகளை நான் கேட்டதால் வெற்றி இல்லை. கலைஞர், தளபதி, கட்சி தொண்டர்களால்தான் வெற்றி கிட்டியது. கழக மூத்த நிர்வாகிகள், முன்னோடிகளுக்கு மட்டுமே வெற்றி சேரும்.

    நாமக்கலில் முதலமைச்சர் தலைமையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பாதுகாப்பாக சென்று பங்கேற்று வர வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

    இங்கு யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். அனைவரின் அன்புக்கும், வாழ்த்துக்கும் நான் தான் அடிமை.

    நான் யாரையும் சின்னவர் என்று அழைக்க சொல்லவில்லை. இருக்கிற பிரச்சனைகள் போதாதா. என் மீதுள்ள அன்பால் மூன்றாம் கலைஞர் என என்னை அழைக்கின்றனர். என்னை பொருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்துகின்றனர். கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே. ஒரே கலைஞர் தான். உங்கள் வயது, அனுபவம் ஆகியவற்றிக்கு நான் சின்னவன். யாரையும் நான் கூப்பிட சொல்லவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செல்லும் வழியெல்லாம் மக்கள் சிரித்த முகத்தோடு அழைக்கின்றனர். அந்தளவிற்கு தமிழகத்தில் ஒரு ஆட்சியை தலைவர் கொடுத்திருக்கிறார்.

    இளைஞர் அணி செயலாளராக 3 ஆண்டுகள் முடித்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறேன். இன்னும் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக மிக அதிகம். பெரியார், அண்ணா ஆகியோரை நான் நேரில் பார்த்தது கிடையாது. நான் பார்த்ததெல்லாம் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், தளபதியை தான்.

    மாவட்ட கழகம் சார்பாக பொற்கிழியை வழங்கி கொண்டிருக்கிறோம். இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று நன்கொடை வாங்கி 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.10கோடி வசூல் செய்து இளைஞரணி அறக்கட்டளையில் சேமித்து இளைஞரணியில் உள்ளவர்களுக்கும், மூத்த முன்னோடிகளுக்கும் பயன்பெறும் வகையில் செய்து வருகிறோம். கட்சி முன்னோடிகளுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் இளைஞர் அணி அலுவலகத்திற்கு கடிதம் எழுதினால் உதவி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: DMK, Udhayanidhi Stalin

    அடுத்த செய்தி