• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் கிரிமினல் வழக்கு: தமிழக அரசு எச்சரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் கிரிமினல் வழக்கு: தமிழக அரசு எச்சரிக்கை

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்

விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதிபட தெரிவித்தார்.

  • Last Updated :
  • Share this:
தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவங்க முற்பட்டால் கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தின் போது பேசிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், நேற்றைய தினம் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 23 இடங்களில் துவங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக பதிலளித்திருப்பது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் கொள்கை முடிவு எடுத்து அனைத்து மாவட்டத்துக்கும் அறிவிக்குமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சண்முகம், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக மத்திய அரசு புதிய கொள்கை வகுத்து, அதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு வருவதாகவும், அவ்வாறு ஏலம் எடுக்கும் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவதாக தெரிவித்தார்.

மத்திய அரசு அனுமதி வழங்கினாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் திட்டத்தை துவங்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது என பதிலளித்தார்.

முதன்முதலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா இதற்காக வல்லுனர் குழு அமைத்து அவர்கள் கொடுத்த அறிக்கைப்படி திட்டத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது என்றும் அதே போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசும் வல்லுனர் குழு அமைத்து சாதக பாதகங்களை ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கும் என்றும் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என உறுதிபட தெரிவித்தார்.

அதே வேளையில் இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டி போராட்டத்தை சிலர் தூண்டி விடுவதாகவும் அமைச்சர் சண்முகம் குற்றம்சாட்டினார்.

மீண்டும் பேசிய ஸ்டாலின், விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது மரபல்ல என்றும், இந்த விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்கும்பட்சத்தில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என கூறினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சண்முகம், யாரையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைபாடு என்ன என்பதை உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியிருப்பதாகவும், தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் துவங்க முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு சட்டத்தில் இடமிருப்பதாகவும், மீறி செய்தால் கிரிமினல் வழக்கு தொடுக்கவும் உரிமை உள்ளதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: