Home /News /tamil-nadu /

மனைவியை கொல்ல முடியாத ஆத்திரத்தில் நாயை கொன்ற நபர் கைது!

மனைவியை கொல்ல முடியாத ஆத்திரத்தில் நாயை கொன்ற நபர் கைது!

  • News18
  • Last Updated :
    வேளச்சேரியில் செல்ல நாயை அடித்து கொன்ற கணவர் மீது போலீசில் புகார் அளித்த மனைவி, அவருக்கு சிறை தண்டனையும் பெற்று கொடுத்துள்ளார். 

    சென்னை வேளச்சேரி சாரதி நகரில் வசித்து வருபவர் ஜெகன்னாத் (32). இவரது மனைவி செல்வி (32). ஜெகன்னாத் சொந்தமாக டிரை கிளீனிங் கடை நடத்தி வருகிறார். செல்வி தனது வீட்டிலேயே அழகு நிலையம் நடத்தி வருகிறார். செல்வியும், ஜெகன்னாத்தும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். காதல் வாழ்க்கையில் 5 ஆண்டுகள் பாசிட்டிவாக காட்டிக்கொண்ட ஜெகன்னாத் பின்னர் கடந்த 5 மாதங்களில் தினமும் குடித்துவிட்டு வருவது, மனைவியிடம் சண்டை போடுவது என நேர்மாறாக நடந்துள்ளார்.

    மாதிரி படம்


    செல்வி தனது வீட்டில் செல்ல பிராணியாக நாயை வளர்த்து வருகிறார். 5 ஆண்டுகள் காதலித்த மனைவியை ஏற்றுக்கொண்ட அவரால் மனைவி வளர்த்து வரும் நாயை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    மாதிரி படம்


    மனைவி வளர்த்துவரும் நாயைக் கண்டால் ஜெகன்னாத்துக்குப் பிடிக்காது. அதனால் அதை அடிக்கடி அவர் அடித்து விரட்டுவதாகவும் கூறப்படுகிறது. ஆசையுடன்  அவரிடம் அடிக்கடி செல்லும் நாயை ஜெகன்னாத் தாக்கும் சம்பவத்தை பலமுறை அவரது மனைவி கண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக, கடந்த 22-ம் தேதி செல்விக்கும் ஜெகன்னாத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் நள்ளிரவு முழுவதும் தொடர்ந்துள்ளது.

    மாதிரி படம்


    ஒரு கட்டத்தில் செல்வியின் கழுத்தில் துப்பட்டாவால் ஜெகன்னாத் இறுக்கியுள்ளார். அவரிடமிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள கணவரை தள்ளிவிட்டு தப்பித்து மயிலாப்பூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு அவர் சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அடுத்த நாள் காலை 10 மணி அளவில் செல்வி வீடு திரும்பியுள்ளார். அங்கு அவரது வளர்ப்பு நாய் கணவரால் தாக்கப்பட்டு மூச்சுத்திணறலுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளது.

    மாதிரி படம்


    இதனால் பதறிப்போன செல்வி நாயைத் தூக்கிக்கொண்டு மருத்துவரிடம் சென்று காண்பித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நாய் உயிரிழந்தது. தன் மேல் உள்ள ஆத்திரத்தில் நாயைக் கொன்ற கணவன் ஜெகன்னாத் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீஸார் நாயைக் கொன்ற ஜெகன்னாத்தை கைது செய்தனர்.

    ஐபிசி பிரிவு 428 மற்றும் 429 (மிருகவதை, மிருகங்களைக் கொல்வது) ஆகிய பிரிவு மற்றும் 506(2) ஆயுதத்தை வைத்து கொலை செய்வதாக மிரட்டல்  பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Published by:Saroja
    First published:

    Tags: Chennai, Fight, Husband jailed, Killed dog, Wife compliant

    அடுத்த செய்தி