சேர்ந்து வாழவில்லையென்றால் தங்கையின் ஆபாச படத்தை வெளியிடுவேன்... மனைவியை  மிரட்டிய கணவர் கைது

சேர்ந்து வாழவில்லையென்றால் தங்கையின் ஆபாச படத்தை வெளியிடுவேன்... மனைவியை  மிரட்டிய கணவர் கைது
தினேஷ்
  • Share this:
என்னுடன் சேர்ந்து வாழவில்லை என்றால் உனது தங்கையின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று மனைவியை மிரட்டிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தினேஷ் வயது 31.  தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . இவருக்கும்  மாதவரம் பொன்னியம்மன்மேடு அன்னபூரணி நகர் பிரதான சாலையை சேர்ந்த வனிதா  வயது 28 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 7 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.

இந்தநிலையில் தினேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்துவிட்டார் மனைவி வனிதா. இதனிடையே 22 வயதுடைய வனிதாவின் தங்கை அடிக்கடி அக்கா வீட்டிற்கு வரும்போது பாத்ரூமில் குளிக்கும் காட்சியை படம் எடுத்து வைத்துள்ளார் தினேஷ்.


நேற்று இரவு வனிதாவின் உறவினர்கள் இரண்டு பேருக்கு அந்த ஆபாச படங்களை அனுப்பி வனிதா என்னுடன் குடும்பம் நடத்த வரவில்லை என்றால் அவளின் தங்கை படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் பயந்துபோன வனிதா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே மாதவரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் வளசரவாக்கம் சென்று தினேஷை கைது செய்து மாதவரம் காவல் நிலையத்திற்கு  அழைத்து வந்தனர்.

காவல்துறை நடத்திய விசாரணையில், வனிதாவின் தங்கை தனது வீட்டுக்கு வந்தபோது ஆபாச படம் எடுத்து வைத்திருந்தேன். வனிதா குடும்பம் நடத்த வரவில்லை என்றால் இணையதளங்களில் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டினேன் என்று தினேஷ் தெரிவித்தார். இதையடுத்து தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்த மாதவரம் போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: தீயாய் பரவும் நெருப்பு கட்டிங் வீடியோ... பற்றி எரியும் இளைஞரின் தலைமுடி...!
First published: January 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்