காதலன் நினைப்பிலே இருந்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் கைது

தென்காசி மாவட்டத்தில், திருமணமாகியும் காதலனை மனைவி மறக்காததால் அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார் கணவன். தப்பியோடிய கணவன் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டத்தில், திருமணமாகியும் காதலனை மனைவி மறக்காததால் அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார் கணவன். தப்பியோடிய கணவன் சிக்கியது எப்படி?

 • Share this:
  தென்காசி மாவட்டம் கேசவபுரம் அருகேயுள்ள கீழப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 20 வயதான கஸ்தூரி. இவருக்கும் புளியங்குடியைச் சேர்ந்த 38 வயதான கண்ணன் என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கண்ணனின் முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில் கஸ்தூரியை அவர் 2வதாக திருமணம் செய்திருந்தார். தம்பதி இடையே ஆரம்பம் முதலே தகராறுகள், சண்டைகள் நடந்ததால் கஸ்தூரி அடிக்கடி கோபித்துக் கொண்டு கீழப்புதூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விடுவார்.

  இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார் கஸ்தூரி. அவரை அழைத்து வருவதற்காக சனிக்கிழமை அன்று மனைவியின் பாட்டி வீட்டிற்கு சென்றார் கண்ணன். கஸ்தூரி வேலைக்கு சென்றிருப்பதாகவும் திரும்பி வந்த உடன் அனுப்பி வைப்பதாகவும் பாட்டி கூறியுள்ளார். சிறிது நேரம் காத்திருந்த கண்ணன் பின்னர் புறப்பட்டு, புளியரை சாலையில், 2 லாரிகளுக்குப் பின்னால் பைக்கில் பதுங்கியிருந்துள்ளார்.

  வேலை முடிந்த பின் கஸ்தூரி அந்த வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பைக்கால் மோதி கீழே தள்ளிய கண்ணன், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கஸ்தூரியை சரமாரியாக கழுத்திலேயே வெட்டியுள்ளார்.

  ரத்த வெள்ளத்தில் விழுந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கண்ணன் பைக்கில் தப்பியோடி விட்டார். தகவல் அறிந்த புளியரை போலீசார், புளியங்குடி போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

  பைக்கில் வீடு நோக்கி வந்த கண்ணனை புளியங்குடி போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன்? என அவரிடம் நடத்திய விசாரணையில் கொலையின் பின்னணி தெரியவந்தது.

  கஸ்தூரி, தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் காதலித்துள்ளார். அந்த இளைஞருக்குத் திருமணமான நிலையிலும் அவரை மறக்க முடியவில்லை. இந்த நிலையில் கஸ்தூரிக்கு கண்ணனுடன் திருமணமானது. அவருக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

  தான் தனது பழைய காதலனுடன் வாழப் போவதாக கஸ்தூரி முரண்டுபிடிக்க, முதல் மனைவி விட்டுப் போனதுபோல் நீயும் போய் விடாதே என கண்ணன் கெஞ்ச, தம்பதி இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளன.

  மேலும் படிக்க... செங்கல் சூளையில் கூலித் தொழிலாளி மர்ம மரணம்.. 3 பேர் கைது .. தொடரும் உறவினர்களின் போராட்டம்

  சமீபத்திய சண்டையில் மனைவி பிரிந்து செல்லவும் அவர் மீது ஆத்திரமடைந்து கொலை செய்ததாக கண்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கண்ணனைக் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: