• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மனித உரிமை என்ற வார்த்தையை பயன்படுத்த தடை- தனியார் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க சைலேந்திர பாபு உத்தரவு

மனித உரிமை என்ற வார்த்தையை பயன்படுத்த தடை- தனியார் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க சைலேந்திர பாபு உத்தரவு

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

மனித உரிமைகள் என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் அமைப்புகள் தொடங்கப்படக் கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மனித உரிமைகளை பேணவும், மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அரசுக்கு தக்க பரிந்துரைகளை வழங்கவும், தேசிய அளவில் புதுடில்லியில் தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில அளவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும் சட்டப்படி அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன. ஆனால், மனித உரிமைகள் என்ற வார்த்தைகளை சில தனியார் அமைப்புகள் தங்களது பெயருடன் சேர்த்துகொண்டு தங்களை தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையங்களுடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்திக்கொண்டு செயல்பட்டுவருவதாக காவல்துறைக்கு நிறைய புகார்கள் வருகின்றன.

    இந்நிகழ்வு ஏற்கெனவே அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975-ல் உரிய சட்டத்திருத்தம் செய்யப்பட்டு மனித உரிமைகள் என்ற சொல்லை தனியார் அமைப்புகள் தங்களது அமைப்பின் பெயருடன் சேர்த்து பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணையின்படி 22-01-2010-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் மனித உரிமைகள் என்ற சொல்லாடலை ஏற்கெனவே தங்களது பெயர்களுடன் பதிவு செய்து பயன்படுத்தி வந்த அமைப்புகள் அச்சொல்லை தங்களது பெயரிலிருந்து நீக்கவும், பிற்காலத்தில் அச்சொல்லாடலை சேர்க்காமல் தனியார் அமைப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இருந்தால் அதிலிருந்து மனித உரிமைகள் என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் பிற்காலத்தில் அவ்வாறு வார்த்தைகள் இல்லாமல் அமைப்புகள் பதிய வேண்டும் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது .

    மேலும், தனியார் அமைப்புகள் தங்களது பெயரை குறிப்பிடும்போது இது ஒரு தனியார் அமைப்பு என்ற பெயர் இணைப்புடன் செயல்படவேண்டும். ஆனால், அதன் பின்னிட்டும் மனித உரிமைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்களுடன் தங்களை போலியாக அடையாளப்படுத்திக் கொண்டும், வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் பெரிய அளவில் மனித உரிமைகள் என்ற பெயர்பலகை மற்றும் ஸ்டிக்கர்களை பொருத்திக்கொண்டு தங்களை பொது அதிகார அமைப்புகள் போல காட்டிக் கொண்டு வாகனங்களை இயக்கி வருவதாகவும் சிலர் தங்கள் அமைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் போலி அடையாள அட்டைகள் வழங்கி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

    ஒரு மாவட்டத்தில் நமது காவல்துறை அதிகாரிகளே இவ்வாறான அமைப்பை திறந்து வைத்திருக்கும் சம்பவமும் நடந்துள்ளது. எனவே, இது குறித்த விழிப்புணர்வு காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே தேவை.

    வாகனங்களில் மனித உரிமைகள் அல்லது ஒன்றியம் அல்லது மாநில அல்லது கவுன்சில் என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் கொண்டு போலியாக வாகனங்கள் இயங்கினால் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: