5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நேரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை தூக்கி எறிந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் உண்டு என குறிப்பிட்டார்.
கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர் மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் பிற 4 மாநிலங்களில் பாஜகவுக்கு ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மத்தியில் மோடி - மாநிலத்தில் யோகி ஆட்சி வேண்டும் என உத்தரப் பிரதேச மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். உத்திரபிரதேசம், உத்தரகாண்ட்டில் 35 ஆண்டுகளாக இரண்டாவது முறையாக எந்த கட்சியும் ஆட்சியமைத்தது இல்லை. அதை மாற்றி பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது சாதனை.
ஜாதி, மத அரசியலை மக்கள் ஏற்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. முத்தலாக் சட்டத்தால் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் சமூக நீதி வழங்கிய கட்சி பாஜக. பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பதையே 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
இதையும் படிங்க: "ஜனநாயகத்தை பாதுகாக்க இன்னும் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும்"-தேர்தல் முடிவு குறித்து கீ.விரமணி பேட்டி
காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் எச்சரிக்கை மணி அளித்துள்ளனர் நேரு குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேரை தூக்கி எறிந்தால் தான் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் உண்டு. 2024 தேர்தலில் மோடி மீண்டும் பிரதமர் என்பதற்கு தற்போதைய தேர்தல் முடிவுகள் சாட்சி. அரசியல் கட்சிகள் கருத்து ஒற்றுமைக்கு பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மத்திய பாஜக அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக பேசுவது மக்களிடம் எடுபடாது என்பதையே தற்போதைய தேர்தல் முடிவுகள் காட்டுவதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இன்மையே உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: 5 மாநில சட்டமன்ற தேர்தல்: 4 மாநிலங்களில் பாஜக வெற்றி முகம்.. தமிழகத்தில் பாஜகவினர் கொண்டாட்டம்...
மேலும், லவ் ஜிஹாத் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மேலூர் சம்பவம் ஒரு உதாரணம். இதில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் மாணவி பலியாகியுள்ளது வேதனை அளிக்கிறது. இந்து மதத்தை அழிப்பதற்கு பெயர் சமூக நீதி என நினைக்கிறார்கள்முதல்வர் மற்றும் அறநிலைய துறை அமைச்சர். மத்திய அரசின் வலிமை மிக்க தலைமையை கொச்சைபடுத்துபவர்கள் தேசவிரோதிகள். நாட்டை காட்டி கொடுக்கும் தீய நோக்கம் கொண்டவர்கள் தான் மத்திய அரசை பற்றி பாரபட்ச குற்றச்சாட்டுகளை கூறுவார்கள் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.