• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுகவை நடத்தவே தகுதியில்லா ஸ்டாலின் எவ்வாறு தமிழகத்தை வழிநடத்துவார்?: அன்புமணி ராமதாஸ்

திமுகவை நடத்தவே தகுதியில்லா ஸ்டாலின் எவ்வாறு தமிழகத்தை வழிநடத்துவார்?: அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

திமுக பத்து வருடங்களாக காய்ந்து போய் உள்ளது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் காய்ந்த மாடு கம்பினில் விழுந்த மாதிரி மேய்ந்து விடுவார்கள்.

  • Share this:
    மீத்தேன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் மு.க.ஸ்டாலின். அத்திட்டத்தை ரத்து செய்யும் வகையில் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்த ஒற்றை காரணத்துக்காகவே அனைவரும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மயிலாடுதுறையில்  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார்.

    மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சித்தமல்லி ஆ.பழனிச்சாமியை ஆதரித்து மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் அருகில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:  "தமிழக வரலாற்றில் 70 ஆண்டுகளுக்குப்பின் முதல்வராக உள்ள விவசாயி எடப்பாடி பழனிச்சாமி. காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்த ஒற்றை காரணத்துக்காகவே அனைவரும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    மண்ணை நாசப்படுத்தும் மீத்தேன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் மு.க.ஸ்டாலின்.  அத்திட்டத்தை ரத்து செய்யும் வகையில் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவர் எடப்பாடி பழனிச்சாமி. 2015-ஆம் ஆண்டு பாமக வெளியிட்ட வரைவுத் தேர்தல் அறிக்கையிலேயே வேளாண் மண்டலம் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளோம். அந்த அறிக்கையை துண்டுப் பிரசுரமாக விநியோகித்து கோரிக்கையை வலியுறுத்தி வந்தோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் பேசிய ஒரே எம்.பி நான்தான். பின்னர் அதிமுக கூட்டணியில் இணைந்தபோது வைத்த 10 நிபந்தனைகளில் முதல் நிபந்தனையே காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான்.

    தொடர் கோரிக்கையை ஏற்று, அதனை சட்டப்பேரவையில் நிறைவேற்றிவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சியில் விவசாயிகள், பெண்கள், மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மருத்துவர் ராமதாஸின் 40 ஆண்டுகால கோரிக்கையான வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தவர் முதல்வர்.  வன்னியர்களைப் போன்று பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் தனி இடஒதுக்கீட்டை பெற்றுத் தருவோம்.

    இதைப்போல் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எதையாவது சுட்டிக்காட்ட முடியுமா?  திமுக பத்து வருடங்களாக காய்ந்து போய் உள்ளது. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் காய்ந்த மாடு கம்பினில் விழுந்த மாதிரி மேய்ந்து விடுவார்கள். மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வராக துடித்துக் கொண்டு உள்ளார். அவருக்கு ஆளுமைத் தன்மை, தலைமைப் பண்பு போன்ற எந்த தகுதியும் இல்லை. அவருக்கு விவசாயம், சமூக நீதி போன்ற எதுவும் தெரியாது. ஒழுங்காக கணக்கும் தெரியாது. ஸ்டாலின் கடைசி பெஞ்ச் மாணவன். அவரை எப்படி வகுப்பு தலைவராக (கிளாஸ் லீடர்). தேர்வு செய்ய முடியும்?.

    எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் எதுவும் பேசியதில்லை. எதற்காக வெளிநடப்பு செய்கிறார் என்று அவருக்கே தெரியாது. சட்டப்பேரவையில்  சட்டையை கிழித்துக் கொண்டதைத் தவிர அவர் வேறு ஏதும் கிழிக்கவில்லை. திமுகவை வழிநடத்துவது பிரசாந்த் கிஷோர் என்கிற அரசியல் புரோக்கர். ரூ.700 கோடி கொடுத்து அவரை நம்பும் மு.க.ஸ்டாலின், மக்களையும், திமுகவினரையும் நம்பவில்லை. திமுகவை நடத்தவே தகுதியில்லா ஸ்டாலின் எவ்வாறு தமிழகத்தை வழிநடத்துவார்?

    திமுக கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி. திமுகவில் அடிமட்ட தொண்டனுக்கு மரியாதை இல்லை. இந்த தேர்தல் மக்கள் ஆட்சிக்கும், மன்னர் ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல். யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாம் என்று அதிமுக நடத்துவது மக்களாட்சி. தந்தை, தந்தைக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என திமுக நடத்துவது மன்னர் ஆட்சி. திமுக பெண்களுக்கும், தாய்மைக்கும் எதிரான கட்சி. திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரைப் பற்றி மோசமாக பேசிய ஆ.ராசாவை மு.க.ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அவர் மட்டுமின்றி பெண்ணுரிமை பேசும் மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கண்டிக்கவில்லை.

    மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று போராடியது பாமக. அதனை அறிவித்தவர் எடப்பாடி பழனிசாமி. மயிலாடுதுறையில் பாமக வேட்பாளர் சித்தமல்லி ஆ.பழனிசாமியை வெற்றி பெறச் செய்தால் அவர் மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி கொண்டு வர பாடுபடுவார் என்றார்.

    மயிலாடுதுறை செய்தியாளர் கிருஷ்ணகுமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: