கொரோனா பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது?

கொரோனா பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது?

கொரோனா பாதுகாப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 6) நடைபெறவுள்ளது. அதற்கா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வருகினறன. வாக்காளர்கள் கொரோனா பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 6) நடைபெறவுள்ளது. அதற்கா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்ற வருகினறன. வாக்காளர்கள் கொரோனா பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே தந்துள்ள வாக்காளர் தகவல் சீட்டையும், இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது, தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 11 அடையாள ஆவணங்களில் எதையாவது ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு, முக கவசம் அணிந்து, வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக வட்டம் வரையப்பட்டு இருக்கும். அந்த வட்டத்திற்குள் வந்து வரிசையில் நிற்க வேண்டும். உங்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அதன் பின்னர், உங்களுக்கான வாய்ப்பு வரும்போது வாக்குப்பதிவு மையத்திற்கு உள்ளே செல்ல வேண்டும். அங்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் இருப்பார்கள்.

    அத்துடன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கான தேர்தல் முகவர்கள் இருப்பார்கள். அவர்களிடம் அந்த தொகுதி மற்றும் வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் இருக்கும். முதல் அலுவலரிடம் உங்கள் பெயர், வார்டு எண் போன்ற வாக்காளர் தகவல் சீட்டில் தரப்பட்டிருந்த தகவல்களைக் கூற வேண்டும்.

    அவர் அதனைத் தன்னிடம் இருக்கும் பட்டியலுடன் சரிபார்ப்பார். உங்கள் பெயர் இருக்கும் பட்சத்தில் அதை சத்தமாக படிப்பார். அதை வேட்பாளர்களின் முகவர்கள் சரிபார்ப்பர். அதனைத் தொடர்ந்து, உங்களிடம் உள்ள வாக்காளர் அடையாள அட்டை அல்லது 11 ஆவணங்களில் ஒன்றை அளிக்க வேண்டும்.

    அப்போது, உங்கள் பெயரை டிக் செய்துவிட்டு 2 ஆம் அலுவலரிடம் அனுப்பி வைப்பார். அங்குள்ள மேஜையில் உங்களின் இடது கையை வைக்க வேண்டும். அந்த அலுவலர் உங்களின் இடது கை ஆள்காட்டி விரலின் நகத்தையும், தோலையும் இணைத்து மை வைப்பார். அந்த மையைத் துடைத்துவிடக் கூடாது. சில நொடிக்குள் நன்றாக காய்ந்துவிடும். பின்னர் உங்களிடம் ஒரு சீட்டை கொடுத்து, அங்கிருக்கும் ஆவணம் ஒன்றில் உங்களின் கையெழுத்தைப் பெறுவார்.

    அதனைத் தொடர்ந்து, 3 ஆம் அலுவலரிடம் நீங்கள் செல்ல வேண்டும். அவர் அந்த சீட்டை வாங்கிக்கொண்டு உங்களின் விரலில் மை இருப்பதை உறுதி செய்வார். அத்துடன், இது கொரோனா பரவல் காலம் என்பதால், வலது கைக்கான கையுறையை அவர் வழங்குவார். அதை கையில் போட்டுக்கொண்டு 4 ஆம் அலுவலரிடம் செல்ல வேண்டும். அவர் நீங்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குப்பதிவு எந்திரத்தை தயார் செய்து வைப்பார்.

    நீங்கள் அட்டைப் பெட்டிகளால் மறைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு, எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரமும், அதன் அருகே விவிபேட் என்ற நீங்கள் போடும் ஓட்டை உறுதி செய்யும் எந்திரமும் வைக்கப்பட்டிருக்கும். உங்களுக்குப் பிடித்தமான வேட்பாளரின் பெயருக்கு நேராக உள்ள நீல நிறை பட்டனை அழுத்த வேண்டும். அப்போது அதன் அருகே இருக்கும் சிவப்பு விளக்கு எரியும், அத்துடன் நீண்ட பீப் சத்தம் கேட்கும்.

    மேலும், விவிபேட் எந்திரத்தின் கண்ணாடியாலான சிறிய திரையின் பின்புறம் ஒரு துண்டுச் சீட்டு அச்சாகி வரும். அதில் நீங்கள் ஓட்டளித்த சின்னம், எண், பெயர் காணப்படும். இது 7 விநாடிகள் நீடிக்கும். பின்னர் அது எந்திரத்திற்குள் விழுந்துவிடும். உங்கள் வாக்கு நீங்கள் தேர்வுசெய்த வேட்பாளருக்கு பதிவாகியுள்ளதா என்பதை இதன் மூலம் உறுதி செய்துகொள்ளலாம்.

    Must Read :  தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு

     

    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், நீங்கள் முகக்கவசம் அணிதல், உரிய சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைக்கு கையுறை அணிந்து வாக்களித்தல் என உரிய பாதுகாப்பு ஏற்படுகளுடன் உங்கள் வாக்கை பதிவு செய்து, ஆரோக்கியமாக அங்கிருந்து வெளியேறுவதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
    Published by:Suresh V
    First published: