இந்தியா...மிக நீண்ட கடற்கரை, உயரமான சிகரம் என இயற்கையால் சூழப்பட்டிருந்தாலும், இயற்கை சீற்றங்களுக்கும் பஞ்சமில்லாதது தமிழ்நாடு. கனமழை, வெள்ளம், புயல், சுனாமி என பலவகையான இயற்கை சீற்றங்களை கண்டிருந்தாலும், அதில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவை புயல்கள்தான்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை எத்தனையோ புயல்கள் வந்து சென்றாலும், பலருக்கும் இன்றும் நினைவில் இருப்பது, தனுஷ்கோடி நகரத்தையே தரைமட்டமாக்கிய 1964 புயல்.
அதைத் தொடர்ந்து, 6 கப்பல்களை உடைத்ததோடு, சென்னை நகரிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திய 1966ல் வீசிய புயல்.
இவ்வாறு எண்ணிலடங்கா புயல்கள் வந்து சென்றாலும், பெரும் சேதத்தை ஏற்படுத்திய அந்த புயல்களுக்கு பெயர்கள் எதுவுமில்லை.
ஏனெனில், உலகம் முழுவதுமே புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் தொடங்கப்பட்டது, 2004ஆம் ஆண்டு தான்.
ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகும் நிலையில், எந்த புயல், எந்த திசையில் வருகிறது என்பதை அறிவதற்காகவே, அவற்றுக்கு பெயர்கள் சூட்டப்படுகின்றன.
சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பில், அங்கம் வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 191.
இந்த நாடுகளை 7 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பு ( World Meteorological Organization) பெயரிட்டுள்ளது,
அந்த வகையில், இந்தியாவை மையப்படுத்தி பிரிக்கப்பட்டுள்ள மண்டலத்தின் பெயர், வட இந்திய பெருங்கடல். பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஈரான், மியான்மர், ஓமன், சவுதி அரேபியா உள்பட 13 நாடுகள் இடம் வகிக்கும் இதற்கு தலைமை வகிப்பது, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை. ஆகவே, அரபிக்கடல், வங்காள விரிகுடா ஆகிய இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டும் அதிகாரத்தை இந்திய வானிலை மையம் ( India Meteorological Department ) பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில், அரபிக் கடல், வங்காள விரிகுடா பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயர்களை பரிந்துரைக்கின்றன, இதில் இடம்பிடித்துள்ள 13 நாடுகளும். சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும், வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படியே, புயல்களுக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
குறிப்பாக, புயல்களுக்கு வைக்கப்படும் பெயர்களில் அரசியல், அரசியல் பிரபலங்கள், கலாச்சாரம், மத நம்பிக்கை, இனம் ஆகியவை பிரதிபலிக்கக் கூடாது.
உலகில் எப்பகுதியில் வாழும் மக்களின் உணர்வையும் காயப்படுத்தாத வகையில் இருப்பதோடு, உச்சரிக்க எளிமையாகவும் இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனை.
பெயர் அதிகபட்சமாக ஆங்கிலத்தில் 8 எழுத்துகளுக்குள் இருக்க வேண்டும் என்பதே, எவ்வளவு பெரிய புயல்களுக்கும் குட்டியாக பெயர் இருப்பதற்கு முக்கிய காரணம்.
ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள் மீண்டும் வைக்கப்படக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு நாடுகளும் தலா 13 பெயர்களை பரிந்துரைக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நெருங்கும் மாண்டஸ் : தற்போது புயல் எங்கே இருக்கு... நேரலையில் பார்க்க வேண்டுமா?
ஒவ்வொரு நாடுகளும் கொடுத்த பெயர்கள், ஆங்கில அகர வரிசைப்படி, சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும்.
இந்திய பெருங்கடல், தென் பசிபிக் கடலில் ஏற்படும் கடல் சீற்றங்கள் புயல் என்றழைக்கப்படுகின்றன, அதே வேளையில், வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசிபிக் மற்றும் கிழக்கு வடக்கு பசிபிக் பெருங்கடலில் இதற்கு பெயர் சூறாவளி.
வடமேற்கு பசிபிக் பெருங்கடலில், இந்த கடல் சீற்றத்தை கடும் புயல் என வானிலை ஆய்வக நிபுணர்கள் அழைக்கிறார்கள்.
கடல் சீற்றங்களை உலக வானிலை ஆய்வாளர்கள் வெவ்வேறாக அழைத்தாலும், அவை அனைத்திற்கு பெயர் வைக்கும் முறை இருக்கிறது.
இதையும் படிங்க: தமிழகத்தை நெருங்கும் ‘மாண்டஸ்’... புயலுக்கு இந்த பெயர் வைக்க காரணம் தெரியுமா?
மாண்டஸ் புயல்
அந்தவகையில் தப்போது, மாண்டஸ் என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸால் பரிந்துரைக்கப்பட்ட பெயர். இந்த பெயரைத்தான் இந்திய வானிலை ஆய்வு மையம் சூட்டியிருக்கிறது. அதேபோல சிட்ராங் என்று பெயரிடப்பட்ட முந்தைய சூறாவளி, அக்டோபர் மாத இறுதியில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையை பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyclone, Cyclone Mandous