Home /News /tamil-nadu /

ஸ்மார்ட் மின் மீட்டர் செயல்படுவது எப்படி...?

ஸ்மார்ட் மின் மீட்டர் செயல்படுவது எப்படி...?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

 • News18
 • 2 minute read
 • Last Updated :
  சமீபத்தில் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்ற மிக முக்கியமான அம்சம் வீடுதோறும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொறுத்துவது. நாடு முழுவதுமே மின் இணைப்பு குளறுபடிகள், மின் திருட்டு ஆகியவற்றால் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கவும், மின் கட்டண வசூலை எளிமையாக்கவும் இந்த ஸ்மார்ட் மின் மீட்டர் பெருமளவில் உதவும் என்று அரசு நம்புகிறது.

  நாட்டின் பல இடங்களில் தனியார் அமைப்புகள் மூலம் தற்போது சோதனை முறையில் இந்த ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சோதனையின் மூலம் தெரியவரும் பயன்பாட்டுச்சிக்கல், பொதுமக்கள் கருத்து ஆகியவற்றை வைத்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடுமுழுவதும் இந்த ஸ்மார்ட் மின் மீட்டர் கொண்டுவரப்பட உள்ளது.

  சென்னை தியாகராயநகர் பகுதியில் விரைவில் ஸ்மார்ட் மின் மீட்டர் வசதி செய்யப்பட உள்ளது. இதற்காக உள்ளாட்சி துறை நிதி ஒதுக்கியுள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்தார். படிப்படியாக அனைத்து பகுதிகளிலும் இந்த ஸ்மார்ட் மின் மீட்டர் பொறுத்தப்பட உள்ளது.

  அமைச்சர் தங்கமணி


  வீடு, தொழிற்சாலை, அலுவலகம் என தற்போது இருக்கக் கூடிய மின் மீட்டர்கள் அகற்றப்பட்டு, ஸ்மார்ட் மின் மீட்டர் பொறுத்தப்பட உள்ளன. பல டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட் மின் மீட்டரில் புகுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், மின்சார வாரியத்தின் வேலை எளிமையாவதுடன், கோடிக்கணக்கான ரூபாயும் மிச்சமாகும்.

  தமிழகத்தில் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கீடு செய்யப்படுகிறது. மின்சார வாரியத்தில் இருந்து வரும் நபர், வீட்டில் உள்ள மீட்டரை ஆய்வு செய்து எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது...? அதற்கான தொகை எவ்வளவு..? என்பதை குறிப்பெடுத்துச் செல்கிறார். இதனை அடுத்து, மின்சார கட்டணத்தை செலுத்த ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.

  காலக்கெடுவுக்குள் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதனை அடுத்து, அலுவலகத்திற்கு நடையாய் நடந்து, அபராதத்துடன் மின் கட்டணத்தை செலுத்திய பின்னரே மீண்டும் மின் இணைப்பு கிடைக்கிறது. பல வேலைகளில் மின் கட்டணம் செலுத்துவது பலருக்கும் மறந்துபோகும் நிலையில், மேற்கண்ட விஷயம் சற்று சிரமத்தை ஏற்படுத்தியது.

  TNEB Office | மின்சார வாரியம்
  மின்சார வாரியம்


  தற்போது ஸ்மார்ட் மின் மீட்டர் மூலம், நாம் தினசரி எவ்வளவு பயன்படுத்துகிறோம்? எவ்வளவு கட்டணம்? ஆகிய தகவல்களை மீட்டரிலேயே பார்க்கமுடியும். இதனை கணக்கிட்டு முன்கூட்டியே நாம் மின்சார கட்டணத்தை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வழியாக செலுத்த முடியும். செல்போன் கட்டணம், டிடிஎச் கட்டணம் ஆகியவற்றை எப்படி பிரீபெய்ட் ரீசார்ஜ் மூலம் செலுத்துகிறோமோ அதேபோல மின்சார கட்டணத்தையும் செலுத்த முடியும்.

  குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால், ஸ்மார்ட் மின் மீட்டர் வேலை செய்யாது. மின்சாரமும் கிடைக்காது. இதனால், பயனர்கள் கட்டாயம் மின்சாரத்தை செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதன் மூலம், அரசுக்கும் சரியான நேரத்தில் வருவாய் கிடைக்கிறது. மேலும், பிரீபெய்ட் முறையில் கட்டணம் செலுத்தும் வசதி இருப்பதால், முன் கூட்டியே அரசுக்கு வருவாய் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

  மின் பயன்பாடு கணக்கு அளவு எடுக்க வருபவர் குறிப்பிட்ட நாட்களில் வராவிட்டாலும், மின் அலுவலக ஆன்லைன் பதிவில் பயனர்கள், அந்த மாதத்தில் பயன்படுத்திய மின் பயன்பாடு அளவு தெரிந்துவிடும். இதனால், பயனர்களே நேரடியாக கட்டணத்தை அறிந்துகொண்டு செலுத்த முடியும். மேலும், வரும் நாட்களில் மின்சார வாரிய அலுவலர்கள் நேரில் வர தேவை இல்லாத வகையில் மாற்றங்கள் இடம்பெறும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  சமீபத்தில், புதிய மின் இணைப்புக்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று மின்சார வாரியம் அதிரடியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube  Published by:Sankar
  First published:

  Tags: TNEB

  அடுத்த செய்தி