தி.மு.க ரூ.1,000: அ.தி.மு.க ரூ.1,500 - இந்த திட்டங்களுக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவு ஆகும்?

தி.மு.க ரூ.1,000: அ.தி.மு.க ரூ.1,500 - இந்த திட்டங்களுக்கு ஆண்டுக்கு எவ்வளவு செலவு ஆகும்?

தமிழக அரசு தலைமைச் செயலகம்

சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து, அ.தி.மு.கவும் தி.மு.கவும் முதற்கட்டமாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. இதற்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Share this:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள் பல அறிவிப்புகளை வெளியிட்டுவருகின்றன. குடும்ப தலைவிகள் அனைவருக்கும், 1,500 ரூபாய் வழங்கப்படும் என்று அதிமுகவும், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுகவும் அறிவித்துள்ளன. இந்த தொகையை பெறுவதற்கான தகுதிகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இருப்பினும், தமிழகத்தில் உள்ள 2.9 கோடி ரேஷன் அட்டைகளில், 2 கோடி பேர் இதற்கு தகுதி பெறுகிறார்கள் என்று வைத்தால், திமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், இதற்காக மட்டும், ஆண்டுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.

அதிமுக தனது ஆட்சியை தக்கவைத்து கொண்டால், ஆண்டுக்கு சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாயை குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுபோக, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் பதிவு செய்து, கேஸ் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டும் 2.38 கோடி பேர். ஒரு சிலிண்டரின் விலை தோராயமாக 800 ரூபாய் என்று எடுத்து கொண்டாலும், 2 கோடி பேருக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் கொடுக்க, 9,600 கோடி ரூபாய் தேவை. தற்போதைய அறிவிப்புகளை பொறுத்த வரை, திமுகவின் அறிவிப்புகளுக்கு 24 ஆயிரம் கோடி ரூபாயும், அதிமுகவின் அறிவிப்புகளுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாயும் தேவைப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்ட தமிழக இடைக்கால பட்ஜெட்டின் படி, மாநிலத்தின் வரி வருவாய், வரும் ஆண்டில் 18 சதவீதம் குறையும் என்றும் வருவாய் பற்றாகுறை 21,000 கோடி ரூபாயில் இருந்து 66 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கடன் 2021 மார்ச் வரையில் 4.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2022 மார்ச்சில் 5.70 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடியாக இருந்த கடன் அளவு, 10 ஆண்டுகளில் 5.70 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளிலும், கடன் அளவு அதிகரிக்கும் என்றே பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வருவாய் குறைவதால், மேலும் அதிக கடன் வாங்கி செலவு செய்யும் நிலையில் தான் தமிழகத்தின் நிதி நிலை உள்ளது. இந்நிலையில், தேர்தலை எதிர்நோக்கி அறிவிக்கப்படும் இது போன்ற திட்டங்கள் தமிழக அரசின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கும் என்ற கருத்துக்கள் எழத்தொடங்கியுள்ளன.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: