தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருப்பதால் போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக தினமும் ஏற்படும் இழப்பு, தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை நிலவரம், மற்றும் போக்குவரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பல்லவன் சாலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அந்தப் பணியை தமிழக போக்குவரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனைகளிலும் பணிபுரியும் 45 வயதை கடந்த அனைத்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி படிப்படியாக போடப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு நோய் தொற்று ஏற்பட்டால் பேருந்தில் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 45 வயதை கடந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் 25,459 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு 37 சதவீதத்தை எட்டி இருக்கிறோம்.
கொரோனா தடுப்பூசி போடும் பணியை படிப்படியாக தீவிரப்படுத்தி வருகிறோம். ஒன்று அல்லது இரண்டு வாரத்தில் போக்குவரத்து துறையில் பணியாற்றும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும். பொதுசுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன.
ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விருப்பப்பட்டால் தடுப்பூசி போட்டு கொள்ளலாம். கண்டிப்பாக போட வேண்டும் என்று கூறவில்லை. சந்தேகம் இருப்பவர்கள் சோதனை செய்துவிட்டு தடுப்பூசி போட்டு கொள்ளலாம். காய்ச்சல் இருந்தால் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. 90 முதல் 95 சதவீதம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறன.
பேருந்துகளில் ஏறும் பயணிகள் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் வழங்க முடியாது. தனிநபர்களுக்கும் பொறுப்பு வேண்டும். முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் சிலர் தகறாறு செய்கின்றனர்.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 16,284 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 2,790 பேருந்துகள் இயக்ககப்பட்டு வருகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 345 பேருந்துகள் இயக்கப்பட்டன.
80 சதவீதம் பேருந்துகள் இரவில் இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் முன்னுரிமை அடிப்படையில் பகல் நேரங்களில் மாற்றி இயக்கப்படுகின்றன. பணிமனையில் இருந்து புறப்படும் பேருந்துகள் சுத்தம் செய்யப்பட்டு பயணிகள் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கால், பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 12 கோடி ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது. நோய் பரவலைத் தடுப்பதற்காக நின்று கொண்டு பயணிக்க கூடாது என்பதால் அலுவலக நேரங்களில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படுகிறன.
இரவு நேர ஊரடங்கால் விரைவு போக்குவரத்து கழகம்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான போக்குவரத்து கழகங்களில் இரவு 11 மணியுடன் சேவையை நிறைவு செய்துவிடுவார்கள் என்பதால் 10 சதவீதம் மட்டுமே பாதிப்பு இருக்கிறது.
அதனையும் தற்போது இரவு 9.30 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களிலும் நோய் பரவலை தடுப்பதற்காக விளம்பர பலகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் பயணிகள் கூட்டம் எவ்வளவு குறைந்துள்ளது என்று ஓரிரு நாட்களுக்கு பிறகுதான் தெரியவரும்.” இவ்வாறு கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, CoronaVirus, Night Curfew, TNSTC