முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளி திறந்த 7 நாளில் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை

பள்ளி திறந்த 7 நாளில் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு - 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை

பள்ளி மாணவிகள் - மாதிரிப்படம்

பள்ளி மாணவிகள் - மாதிரிப்படம்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பள்ளிகளை மூடி அனைவருக்கும் பரிசோதனை செய்யும் நடைமுறை தொடரும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாட்டில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, கடந்த ஒன்றாம் தேதி முதல் நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 24 மாணவ, மாணவியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவியுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 103 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. . பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட பள்ளியில் மாநகராட்சி துணை ஆணையர் மனிஷ் நேரில் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவருடன் பயின்ற 17 மாணவிகள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குடும்பத்தினருக்கு சோதனை செய்ததில் மாணவியின் தாய்க்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது. இவர்களை அழைத்துச் செல்ல வாகனங்கள் கிடைக்காததால், மாணவியின் தந்தை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை மாணவ, மாணவியர் 24 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்றார். தொற்று உறுதி செய்யப்பட்ட பள்ளிகளை மூடி அனைவருக்கும் பரிசோதனை செய்யும் நடைமுறை தொடரும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஏற்கெனவே கொரோனா பாதிப்பு ஒரு சதவீதம் உள்ள பகுதிகளில் மட்டும்தான் தொற்று பதிவாகி இருக்கிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்போது மாணவர்களுக்கு பதிவாகி இருக்கும் தொற்றுக்கூட, பள்ளியில் இருந்து ஏற்படவில்லை என்றும், வெளியில் இருந்துதான் ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாதிப்பு அதிகமானால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Must Read : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை - மா.சுப்பிரமணியன்

பள்ளிகளில் ஒரு மாணவருக்கு தொற்று ஏற்பட்டால் கூட, தொடர்புடைய அனைவருக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது, பள்ளியை தற்காலிகமாக மூடுவது, கிருமிநாசினி கொண்டு பள்ளிகள், வளாகம் போன்றவற்றை சுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் பள்ளிகள் தீவிரம் காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Corona positive, CoronaVirus, School students