தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் சனிக்கிழமையன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் ஆளும் திமுக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் 21 மாநராட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால், திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் பெரும் தோல்வியை தழுவி உள்ளன.
எனினும், தனித்துப்போட்டியிட்ட பாஜக கனிசமான வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்கோடு இருந்து வந்த பாஜக, இந்த தேர்தலில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கனிசமான வெற்றியை பெற்றுள்ளது.
அதேபோல், இந்த தேர்தலில் பெரும்பாலான வார்டுகளில் சுயேச்சைகளும் அதிக இடங்களை பிடித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். பல இடங்களில் பேரூராட்சி சுயேச்சைகளின் வசமாகி உள்ளது. இதனால், நகர் மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவியை தீர்மானிப்பதில் சுயேச்சைகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மார்ச் 4ம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.
இவ்வாறு நடைபெறும் மறைமுக தேர்தல் மூலம் 21 மேயர்கள், 21 துணை மேயர்கள், 138 நகர் மன்ற தலைவர்கள், 138 நகர் மன்ற துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சி மன்றத் தலைவர்கள், 490 பேரூராட்சித் துணைத் தலைவர்கள் என 1,298 பதவிகளுக்கானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதற்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களில் இருந்து ஒருவரையே பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய அந்த மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பார்கள்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கடவுள்: தங்க மோதிரம் அணிவித்த திமுகவினர்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பதவி நேரடியாக அல்லது மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவது தொடர்ந்து வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த 2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது மாநகராட்சி மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதே அதிமுக அரசு 2011ஆம் ஆண்டில் மேயர் பதவிக்கு மீண்டும் நேரடி தேர்தல் முறையை கொண்டு வந்தது. 2016ஆம் ஆண்டில் அதிமுக அரசே, மேயர் பதவிகளுக்கான நேரடி தேர்தலை ரத்து செய்ய சட்ட திருத்தமும் கொண்டு வந்தது.
மறைமுகத் தேர்தல் என்பது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இடங்களில் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் அனைத்து தரப்பிலும் உள்ளது. குதிரை பேரம், பண பலம் கொண்டவர்கள் தேர்தலில் வெற்ற பெற்ற கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் சம்பவங்களும் நடக்கலாம் என்பதால்,தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கட்சியின் பாதுகாப்பில் இருக்க வேண்டும். அதற்கும் மேல், நடக்கும் வேடிக்கைகளை பொருத்திருந்து பார்ப்போம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.