அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுள்ளனர். கடந்த 9 நாட்களில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது எப்படி என பார்க்கலாம்.
அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்து தொடங்கி வைத்த பிரச்சனை கட்சியில் ஒரு பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது. அதுவரை ஒற்றுமையாக இருந்ததுபோல் காணப்பட்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரின் முகாம்களில் இருந்து அதிருப்தி குரல்கள் வெடித்துக் கிளம்பின
ஓபிஎஸ் மிகவும் நல்லவர் என்ற கருத்து ஒருபுறம் பரவிக் கொண்டிருக்க, கட்சியை வழிநடத்த நல்லவரை விட வல்லவர்தான் முக்கியம் என கூறிக்கொண்டு அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக குரல் தந்தனர்.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக சுமார் 2,665 பேரில், 2,300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது கடந்த சில நாட்களில் தெரியவந்தது.
மொத்தமுள்ள 65 சட்டமன்ற உறுப்பினர்களில், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தவிர 62 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுவதை ஓபிஎஸ் தரப்பு மறுக்கவில்லை.
இதனிடையே ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளராக இருந்த மைத்ரேயனும் திடீரென மனம்மாறி சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதுபோல் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஓபிஎஸ் கூடாரத்தில் இருந்து ஈபிஎஸ் முகாமுக்கு திடீரென தாவினர்.
இதேபோல், ஓபிஎஸ்ஸை ஆதரித்து வந்த தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக் திடீரென பல்டியடித்து எடப்பாடிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆதரவாளர்களுடன் பேண்ட் வாத்தியம் முழங்க எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அசோக் தனது ஆதரவை நல்கினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து இணைத்து கொண்டது பல விமர்சனங்களை எழுப்பியது. ஓபிஎஸ் ஆதரவாளர் திருவள்ளுவர் தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்துவிட்டார்.
கட்சியில் அமைப்பு ரீதியாக உள்ள 75 மாவட்ட செயலாளர்களில், 70-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்றுவரை ஆதரவு அளித்துள்னளர். ஒற்றை இலக்க மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர்.
Must Read : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு
இவ்வாறாக ஒருவர் பின் ஒருவராக நிர்வாகிகள் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவிக்க வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனைத் தவிர நன்கு பரிச்சயமான தலைவர்கள் யாரும் ஓபிஎஸ்ஸுடன் இல்லை. கடந்த சில நாட்களாக நடந்த மோதலின் முடிவில் அதிமுக-வில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பது தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.