முகப்பு /செய்தி /தமிழ்நாடு / லோன் ஆப் மோசடி - இயங்குவது எப்படி? - முழு ரிப்போர்ட்!

லோன் ஆப் மோசடி - இயங்குவது எப்படி? - முழு ரிப்போர்ட்!

கோப்பு படம்

கோப்பு படம்

லோன் ஆப் மோசடிகளால் இந்தியா முழுவதும் மாதத்திற்கு சுமாராக 45 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் தெரியவித்தனர்.

  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட லோன் ஆப்களில் இருந்து கடன் பெறுபவர்களை, அந்த ஆப்பின் உரிமையாளர்களே தொடர்ச்சியாக மிரட்டி வருவதாக சென்னை மத்திய குற்றப் பிரிவு - சைபர் கிரைம் போலீசாருக்கு 5 புகார்கள் வந்தன.

குறிப்பாக, பணம் செலுத்திய பின்னும் லோன் ஆப் மோசடிக்காரர்கள் கடன் பெற்றவர்களின் செல்போன்களை ஹேக் செய்து போனில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து மார்ஃபிங் செய்து, ஆபாச புகைப்படங்களாக சித்தரித்து மொபைலில் உள்ள நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் பெரும் மன உலைச்சளில் இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து தனிப்படை அமைத்து லோன் ஆப் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். குறிப்பாக ப்ளே ஸ்டோரில் உள்ள லோன் ஆப் செயலிகள் ஆராய்ந்தும், புகார் அளித்தவர்களுக்கு, லோன் ஆப் மோசடிதாரர்கள் அனுப்பிய மெசேஜ் மற்றும் செல்போன் கால்களை ஆய்வு செய்தும், 200-க்கும் மேற்பட்ட ஈமெயில் முகவரிகள், வங்கி கணக்குகள், ஆயிரத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் எண்கள் சேகரிக்கப்பட்டு காவல்துறையினர் ஒரு தரவு தளம் (Data Base) உருவாக்கினர்.

இதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் உத்திரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டது. அங்கு சென்ற போலீசார் செல்போன் சிக்னல்களை வைத்து லோன் ஆப் கலெக்சன் ஏஜென்டான உத்தர பிரதேச மாநிலம் ஜங்கல் குல்ரிஹா பகுதியைச் சேர்ந்த தீபக்குமார் பாண்டே (26) என்பவரை கைது செய்தனர்.

இதையும் வாசிக்க: லோன் ஆப்களை பயன்படுத்த வேண்டாம் - மக்களுக்கு சென்னை காவல் ஆணையர் வேண்டுகோள்!

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரியானா மாநிலம் துண்டகேரா பகுதியைச் சேர்ந்த ஜிதேந்தர் தன்வர் (24) மற்றும் அவரது சகோதரியும் டீம் லீடருமான நிஷா (22) என்பவரையும் கைது செய்தனர். தொடர் விசாரணையில் டீம் லீடர்களை கண்காணிக்கும் டீம் மேனேஜரான டெல்லியைச் சேர்ந்த பிரகாஷ் சர்மா (21) என்பவரையும் மத்திய குற்ற பிரிவு - சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த லோன் ஆப் மோசடி கும்பலானது லோன் பெறும் பொதுமக்களை மிரட்டி லோன் பணத்தை கட்ட வைத்து பின்னர் பொதுமக்கள் பணம் கட்டிய பிறகும் லோன் பணத்தை விட அதிகமான பணத்தை வசூலித்து வந்ததும் தெரிய வந்தது.

50 நபர்களைக் கொண்டு குழுவை வைத்து இந்த 4 நபர்களும் மோசடியை நடத்தி வந்தனர் எனவும் இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே மோசடி செயல்களில் ஈடுபட்டு வரும் Work From Home மோசடி கும்பல்கள் என தெரியவந்தது. லோன் ஆப் மோசடியில் ஈடுபட்டு வரும் இவர்கள் யாரையுமே ஒருவரை ஒருவர் தெரியாது எனவும் ஆன்லைனில் மட்டுமே தொடர்பு கொண்டு இந்தியாவின் பல பகுதிகளில் லோன் ஆப்பில் பணம் கொடுத்து பின் மோசடியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இவர்கள் Cash coin, Cash world, New Credit, Gold Money, Best rupee, Rupee Handy, Sam Cash, Home Cash, Dutta Rupee, Royal Cash, Open Credit, Table Cash, Buddy Cash, Home Case, Loan Bro-M, Handy Loan, West Cash, Small Credit போன்ற 50க்கும் மேற்பட்ட லோன் ஆப்கள் மூலம் பொது மக்களுக்கு பணம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதையும் வாசிக்க: கோடநாடு கொலை வழக்கு : மூடி மறைக்கப்பட்ட பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன - காவல்துறை

இவர்கள் லோன் ஆப்பை உருவாக்குவதற்காகவே தனியாக ஒரு சாப்ட்வேர் டெவலப்பர் டீமையும், புகைப்படங்களை மார்ஃபிங் செய்வதற்காக ஒரு போட்டோ ஷாப் டீமையும் வைத்து மோசடியை அரங்கேற்றி வந்துள்ளனர்.

நாளொன்றுக்கு சுமாராக ஒரு கோடி ரூபாய் வரை பொது மக்களிடமிருந்து பணம் பறித்து வந்ததும், அதனை உடனடியாக பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றியும் பின்பு அதிலிருந்து ஒரு பகுதியை புதிதாக வரும் வாடிக்கையாளர்களுக்கு லோன் கொடுத்து, இதனை ஒரு சுழற்ச்சியாகவே செய்து வந்துள்ளனர்.

குறிப்பாக கைது செய்யப்பட்ட நால்வரில் டீம் லீடரான நிஷா, கலெக்ஷன் ஏஜென்டான ஜித்தந்தர் தன்வர், டீம் மேனேஜரான பிரகாஷ் சர்மா ஆகியோர் பட்டப்படிப்பு படித்துக் கொண்டே மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது போன்ற லோன் ஆப் மோசடிகளால் இந்தியா முழுவதும் மாதத்திற்கு சுமாராக 45 ஆயிரம் நபர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் போலீசார் தெரியவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள் மற்றும் 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இவர்களது வங்கி கணக்குகளை கண்டறிந்து அதனை முடக்கும் பணியிலும் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில் இவர்கள் பின்னணியில் இருக்கும் நபர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Cyber crime, Loan app, Police