பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைப்பதா? அதிமுக கண்டனம்

ஓபிஎஸ்- இபிஎஸ்

மதுரையில் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி அதனை கலைஞர் நூலகமாக மாற்ற திமுக அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

  இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்த வேண்டியதும், அவர்களது பெருமைகளை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி மரியாதை செய்ய வேண்டியதும், அவர்கள் வாழ்ந்த இல்லங்களை பேணிப் பாதுகாப்பதும் ஒரு நல்லரசின் கடமையாகும்.

  Also read: 30 வயது இளைஞரை கடத்தி கத்திமுனையில் திருமணம் செய்த 50 வயது பெண்!

  அந்த வகையில், பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்தப் பணத்தையும் செலவு செய்து முல்லைப் பெரியாறு அணையை உருவாக்கி, தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்த பென்னிகுயிக் நினைவு இல்லம் தமிழக அரசால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

  இச்சூழலில், நூறாண்டிற்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதனை உறுதிப்படுத்தும் வண்ணம், ‛மதுரையில் அந்த பொதுப்பணித்துறை கட்டடத்தில் ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை,' என மாவட்ட ஆட்சியர் அறிவித்து இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஒரு வரலாற்றை அழித்து இன்னொரு வரலாற்றை உருவாக்க நினைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒருவர் வாழ்ந்த இல்லம் நூறாண்டு கடந்து அரசால் பராமரிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் அவர் இந்த நாட்டிற்கு செய்த நன்மைகளை, தியாகங்களை, தொண்டுகளை எதிர்காலத் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். இதனை அழித்துவிட்டால், அப்பகுதி மக்கள் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழக அரசின் இம்முடிவு, சரித்திரதத்தை சிதைப்பதற்கு சமம் என்பதை சுட்டிக்காட்டி, அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

  தென் தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி அந்த இல்லத்தில் கலைஞர் நூலகம் அமைக்கப்படுமானால், விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராட்டத்தில் குதிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.
  Published by:Esakki Raja
  First published: