எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தமிழ் கடவுள் முருகன் என்று முழங்கிய அமித்ஷா! ஏன் வீழ்ந்தது பா.ஜ.க?

அமித்ஷா பேசும்போது, அ.தி.மு.க தொண்டர்களை உற்சாகப்படுத்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஏழை மக்களுக்காக உழைத்தவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

news18
Updated: May 23, 2019, 5:11 PM IST
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, தமிழ் கடவுள் முருகன் என்று முழங்கிய அமித்ஷா! ஏன் வீழ்ந்தது பா.ஜ.க?
அமித் ஷா
news18
Updated: May 23, 2019, 5:11 PM IST
குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, 5,55,000 வாக்குகள் முன்னிலையில் உள்ளது. அவரது வெற்றி உறுதியாகியுள்ளது. இன்று வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு சாதகமாக உள்ளன. நாடு முழுவதும் பா.ஜ.க கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பா.ஜ.க கூட்டணி 349 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க மட்டும் 299 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் வலிமையைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கான காரணமாக மோடி அலையும், ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க தலைவர் அமித்ஷா அமைத்த வலுவான கூட்டணியும் வியூகம் பார்க்கப்படுகிறது.

கூட்டணிகளை அரவணைத்த அமித்ஷா:

மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பா.ஜ.கவை தொடர்ச்சியாக விமர்சித்துவந்த நிலையிலும், அவரை நேரில் சந்தித்துப் பேசி வெற்றிகரமாக கூட்டணி அமைத்தார் அமித்ஷா. பீகாரில் நிதிஷ் குமாருடனும், வடகிழக்கில் பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார். அந்தக் கூட்டணி பா.ஜ.கவுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க அமைத்து வலுவான கூட்டணியில் பா.ஜ.க தன்னை சரியாக இணைத்துக் கொண்டது. பா.ம.க தொடர்ச்சியாக பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து வந்த போதிலும், அதனைப் பெரிதுபடுத்தாமல் கூட்டணியை அரவணைத்தது பா.ஜ.க.

அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையிலும், பா.ஜ.க வேட்பாளர்கள் கௌரவமான வாக்குகளைப் பெறுவதற்கு இந்த கூட்டணி உதவியுள்ளது. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல் தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு கடுமையான எதிர்ப்பு நிலவியது. அந்த எதிர்ப்புகளைக் கடந்து பா.ஜ.க இத்தனை சதவீத வாக்குகளைப் பெற்றது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் பா.ஜ.க அமைத்த கூட்டணி:

தமிழகத்தில் அமித்ஷா மேற்கொண்ட பிரச்சார யுக்தி அக்கட்சிக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
Loading...
2014-ம் ஆண்டு மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பா.ஜ.க, நாடு முழுவதும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அப்போது, பா.ஜ.கவின் தேசியத் தலைவராக இருந்தவர் ராஜ்நாத் சிங். அவரைத் தலைவராக கொண்டு வந்தவர் எல்.கே.அத்வானி. தமிழகத்தின் தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் இருந்தார்.

கடந்தமுறையும், தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு எப்படியேனும் வலுவான கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்று தீவிரமாக இருந்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அதில், வெற்றிகண்ட அவர், ம.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்துக் காட்டினார். கூட்டணியில் அதிக தொகுதிகள் தே.மு.தி.கவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட்டணிக்கு தலைமை தாங்கியது பா.ஜ.கதான். அந்தக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றே அழைக்கப்பட்டது. தொகுதி ஒதுக்கீடும் ஒவ்வொரு கட்சிகளுக்கும் தனித்தனியாக அறிவிக்கப்படவில்லை. 2014-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி சென்னை வந்த தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்குடன் கூட்டணி கட்சித் தலைவர்கள் விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ், வைகோ, பாரிவேந்தர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் தான் தொகுதி பங்கீடு குறித்து அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 19-ம் தேதி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வருகிறார் என்று அறிவித்திருந்தது பா.ஜ.க. அவர், சென்னை வரும்போது, அ.தி.மு.கவுடனான கூட்டணி உறுதி செய்யப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், திடீரென அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டது. ஆனால், அறிவித்தபடி, தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்தார்.

ஆனால், இந்தமுறை, தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் அமித்ஷா நேரடியாகத் தலையிடவில்லை. (பா.ஜ.க தலைமையில் கூட்டணி அமைக்காததுதான் அமித்ஷா தலையிடவில்லை என்று கருதப்பட்டது) பா.ஜ.க கூட்டணி அமைக்கவும் இல்லை. அ.தி.மு.க அமைத்த கூட்டணியில் பா.ஜ.க இணைந்து கொண்டது அவ்வளவுதான்.

பிப்ரவரி 20-ம் தேதி சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பா.ம.கவுக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக அறிவித்தனர். காலையில், பா.ம.கவுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்த அ.தி.மு.க, மதியம் பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. பா.ஜ.க சார்பில் பியூஸ் கோயல், தமிழிசை சௌந்தர்ராஜன், பொன்.ராதா கிருஷ்ணன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பா.ஜ.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க அறிவித்தது. தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி என்றும் அறிவித்தது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை முன்னிறுத்திய அமித்ஷா:

தொகுதி பங்கீட்டு நிகழ்வில் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பங்கேற்கவில்லை. மாறாக, கூட்டணி உறுதி செய்யப்பட்ட மூன்று நாள்களுக்குப் பிறகு, பிப்ரவரி 22-ம் தேதி தமிழகம் வருகை தந்தார் அமித்ஷா. டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் சென்றார். அங்கு, பா.ஜ.க பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில் பேசிய அவர், ‘அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும். காங்கிரஸ் ஆட்சியைவிட தமிழகத்துக்கு பா.ஜ.க 5 மடங்கு நன்மையை செய்துள்ளது. எதிர்கட்சிகள் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பளார் என்று அறிவிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார். அமித்ஷாவின் வருகை தமிழக பா.ஜ.கவினரை உற்சாகப்படுத்தியது. ஏற்கெனவே, அ.தி.மு.க, பா.ம.க கூட்டணியில் இணைந்ததால் உற்சாகமாக இருந்த பா.ஜ.கவினருக்கு அமித்ஷாவின் வருகை மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அப்போது, பா.ஜ.கவுக்கான தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்தார் அமித்ஷா.

பின்னர், மார்ச் 10-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அனைத்து அரசியல்கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர். தேசியத் தலைவர்களின் வருகையை பா.ஜ.கவினர் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏப்ரல் 2-ம் தேதி தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக மீண்டும் தமிழகம் வந்தார் அமித்ஷா. டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அமித்ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரிக்குச் சென்றார். அங்கிருந்து கார் மூலம், சிவகங்கை சென்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கே, பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்னர், தூத்துக்குடி சென்று தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அங்கிருந்து கோயம்புத்தூர் சென்று சி.பி.ராதாகிருஷ்னணுக்கு வாக்கு சேகரித்தார்.

சிவகங்கையில் பேசிய அமித்ஷா, ‘பிரதமரின் மருத்துவக் காப்பீடு திட்டம் மூலம் 50 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இத்தேர்தலில் மோடி தலைமையில் சிறப்பான கூட்டணி அமைந்துள்ளது. இன்னொரு பக்கம் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழலில் சிக்கியுள்ள கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் அ.ராசா, சிதம்பரம், காங்., வேட்பாளர் கார்த்தி ஆகியோரை கொண்ட கூட்டணி. சாகர்மாலா' திட்டத்திற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளோம்’ என்று மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு குறித்து பேசினார்.

தூத்துக்குடியில் பேசத் தொடங்கிய அமித்ஷா, ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சுப்ரமணியன், சிவசந்திரன், பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் அபிநந்தனை நினைத்து பேசுகிறேன் என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். தெய்வ அருள் பொருந்திய முருகனை நினைத்து பேசுகிறேன்’என்று தமிழ் கடவுள் குறித்து பேசினார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகன் ஏராளமானோர் வழிபாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராமரைக் கடவுளாக முன்னிறுத்தி நாடு முழுவதும் பிரச்சாரம் அமித்ஷா, தமிழகத்தில் முருகன் குறித்து பேசினார். இது, தமிழ் மக்களுடன் அமித்ஷா நெருங்குவதற்கு உதவி செய்தது.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் போல 5 ஆண்டுகள் ஏழை மக்களுக்காக மோடி ஆட்சி செய்துவருகிறார் என்று எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகழ்ந்தார் அமித்ஷா. தொடர்ந்து பேசிய அவர், ‘மீனவர்களின் நலனைப் பாதுகாக்க தனியாக ஒரு துறை அமைக்கப்பட்டு உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்டவை அமைக்க ரூ.12 ஆயிரம் கோடியும், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு ரூ.23 ஆயிரம் கோடியும், ரெயில்வே துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டது’என்று பா.ஜ.கவுக்கு சாதமாக சிலவற்றைப் பேசினார்.

அமித்ஷா பேசும்போது, அ.தி.மு.க தொண்டர்களை உற்சாகப்படுத்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஏழை மக்களுக்காக உழைத்தவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் பெயர்களைப் பயன்படுத்தினார். தூத்துக்குடியில் அமித்ஷா பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொண்டார். தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு எதிராக தி.மு.க சார்பில் வலிமையான வேட்பாளர் கனிமொழி களமிறக்கப்பட்டிருந்தநிலையில், அமித்ஷாவின் பேரணி தமிழிசைக்கு முக்கியமானதாக அமைந்தது.

கோயம்புத்தூரில் சி.பி.ராதாகிருஷ்னணை ஆதரித்து பேசிய அமித்ஷா, ‘மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய நிதிகள் குறித்து விவரித்தார். அவருடைய பேச்சில் 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கனிமொழி, ஆ.ராசாவை கடுமையாக விமர்சனம் செய்தார். கார்த்தி சிதம்பரம் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதாக கடுமையாக சாடினார்.

பிரச்சாரத்துக்காக ஒரே ஒரு நாள் தமிழகம் வருகை தந்தநிலையிலும், தூத்துக்குடி, சிவகங்கை, கோயம்புத்தூர் என்று மூன்று தொகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து அசத்திச் சென்றார் அமித்ஷா. இருப்பினும், அவருடைய பிரச்சாரம் தமிழகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்று தேர்தல் முடிவுகள் பறைசாற்றியுள்ளன. தமிழகத்தில் இயல்பாகவே நிலவும் பா.ஜ.க எதிர்ப்பு தன்மையை அவர்களது வியூகத்தால் சமாளிக்க முடியவில்லை என்பதையை இது காட்டுகிறது.

Also see:
First published: May 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...