பைானான்ஸ் நிறுவன உரிமையாளர் ரவியின் மனைவி கலைவாணி கொலை செய்யப்பட்டு 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கலைவாணி வீட்டில் வேலைக்கு சேர்ந்த ராகேஷும் அவரது மனைவியும் கொலை வழக்கில் சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் 52 வயதான ரவி. இவர் சென்னை சவுகார்பேட்டையில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். ரவியின் மனைவி 47 வயதான கலைவாணி. இந்த தம்பதியின் மகன் உமேஷ், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பணிபுரிந்து வருகிறார். வீட்டு வேலைக்கு நல்ல நபர்கள் வேண்டும் என கலைவாணி கேட்டுள்ளர்.
அதனால், ரவியின் நண்பர் மேஸ்திரி தமிழ்வாணன் மூலம், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து 31 வயதான ராகேஷ், 25 வயதான அவரது மனைவி ரேவதி இருவரும் அழைத்து வரப்பட்டு கலைவாணி வீட்டு வளாகத்தில் உள்ள மற்றொரு வீட்டில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில், ரவி தனது மனைவிக்கு போன் செய்துள்ளார். அழைப்பு ஏற்கப்படவில்லை. சந்தேகமடைந்த ரவி, அவசரம் அவசரமாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு வெளியே பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நாற்காலியில் அமர்ந்த நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு தலையில் காயத்துடன் சடலமாகக் கிடந்தார் கலைவாணி.
அதிர்ச்சியடைந்த ரவி, உடனடியாக மாதவரம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை அகற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர் முதற்கட்ட விசாரணையில், கலைவாணி வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த ராகேஷும் அவரது மனைவி ரேவதியும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. மேலும் ராகேஷின் உறவினர்கள் ஆற்காடு ராணிப்பேட்டை மற்றும் வாலாஜா பகுதிகளில் இருப்பது தெரியவந்தது.
ராகேஷின் உறவினர்களிடம் சேகரித்த தகவல்களின் அடிப்படையிலும், செல்போன் சிக்னல் அடிப்படையிலும், பெங்களூருவில் உள்ள கேஆர் புரத்தில் பதுங்கியிருந்த தம்பதியைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கலைவாணியைத் தாங்கள் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர்.
வேலைக்கு சேர்ந்த புதிதில், கலைவாணி அதிக நகைகளை அணிந்திருப்பதும், ரவியிடம் அதிக பணம் புழங்குவதும் ராகேஷ் தம்பதி கண்களை உறுத்தியுள்ளன. எப்படியாவது கலைவாணி வீட்டில் நகை, பணத்தைக் கொள்ளையடித்து விட வேண்டும் என இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நாற்காலியில் அமர்ந்தபடி கலைவாணி வீட்டு வேலைகளைச் சொல்லியபடி இருந்துள்ளார். அப்போது பின்னால் இருந்து வந்த ராகேஷ் இரும்புக் கம்பியால் அவரது தலையில் அடித்துக் கொலை செய்துள்ளார்.
மேலும் படிக்க...தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோன
பின்னர் அவரை நாற்காலியில் வைத்தே, கை, கால்களைக் கட்டிப் போட்டு விட்டு 30 பவுன் நகைகள், மற்று்ம 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் தம்பதி வீட்டில் இருந்து தப்பியுள்ளனர். ஆட்டோ மூலம் கோயம்பேடு சென்று அங்கிருந்து பெங்களூரு தப்பியுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது ராகேஷ் - ரேவதி தம்பதியைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகளையும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
30 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு வீட்டு உரிமையாளரின் மனைவியை வேலைக்கார தம்பதி கொலை செய்து பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.