ஓசூர் எம்.எல்.ஏ. மகன் உள்ளிட்ட 7 பேர் கோர விபத்தில் உயிரிழந்த சம்பவம்... கற்று தரும் பாடம் என்ன?

ஓசூர் எம்.எல்.ஏவின் மகன் உயிரை குடித்த விபத்து

பிள்ளைகளை செல்லமாக வளர்க்கிறேன் பேர்வழி என அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்துவிட்டு பின்னர் காலத்துக்கும் சோகத்தை சுமந்து கொண்டு இருக்க வேண்டிய துயர நிலை ஏற்படுவதை.பெற்றோர்கள் நினைத்தால் தவிர்க்கலாம்.

  • Share this:
விலையுயர்ந்த ஆடி சொகுசுக் காரில் அதிவேகமாக சென்ற ஓசூர் எம்.எல்.ஏவின் மகன், உறவினர் உள்ளிட்ட 7 பேர் பெங்களூருவில் ஏற்பட்ட சாலை விபத்தில் மரணம் என்பதே அதிகமாக பேசப்படும் செய்தியாக இருக்கிறது. சாலை விபத்துகள் நமக்கொன்றும் புதியது கிடையாது என்ற போதிலும் இந்த விபத்து நமக்கு சில படிப்பினைகளை கற்றுத்தருகிறது. குறிப்பாக மாணவ பருவ பிள்ளைகளை கொண்ட பெற்றோருக்கு...

ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷின் மகன் கருணா சாகர், இவருக்கு வயது 24 தான் ஆகிறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் கருணா சாகர் ஆடி க்யூ3 மாடல் சொகுசுக் காரில் தனது உறவினர், நண்பர்கள் 6 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த போது பெங்களூருவின் கோரமங்களா பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேரும் பரிதாபமாக பலியாகினர்.

அதிகபட்சமாக 5 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய அந்த காரில் 4 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 7 பேர் முண்டியடித்துக் கொண்டு அமர்ந்திருக்கின்றனர். யாருமே சீட் பெல்ட் அணியவில்லை. காரை அதிவேகமாக கருணா சாகர் இயக்கியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில் 7 இளைஞர்களுமே பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

விபத்து - பெற்றோர்களின் பங்கு என்ன?

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துகள் நடைபெறுவதும் அதில் உயிரிழப்புகள் அதிகம் இருப்பதும் தெரிந்த ஒன்று தான். ஆனால் இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை அதிவேகத்தில் செல்வதால் மட்டுமே ஏற்பட்டு வருகிறது என்பது முக்கியமான ஒன்று.

ஓசூர் எம்.எல்.ஏ பிரகாஷின் மகன் கருணா சாகர்


பாதுகாப்பான காராக விளங்கக்கூடிய ஆடி க்யூ3 மாடலிலே பயணித்த 7 பேரில் ஒருவர் கூட உயிர்தப்பவில்லை என்பதில் இருந்தே ஒன்று புலப்படுகிறது. அதிவேகத்தில் வாகனங்களை இயக்கினால் ஆடி காராக இருந்தாலும் சரி சாதாரண ஹேட்ச்பேக் காராக இருந்தாலும் சரி பாதுகாப்பு இல்லை என்பது தான்.

இள வயதினர், குறிப்பாக மாணவர்களை கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் அடம்பிடிக்கிறார்கள் என்பதாலேயே அதிவேக வாகனங்களை வாங்கித் தந்துவிடுகிறார்கள். அந்த வாகனங்களை வைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் அட்டகாசங்களை சாலைகளில் பயணிப்பவர்கள் மட்டுமே கண்கூடாக காண்கின்றனர். அவர்கள் செய்யும் செயலால் அவர்களுக்கும், சாலைகளில் பயணிப்பவர்களுக்குமே பாதுகாப்பில்லை.

விபத்தில் சிக்கிய ஆடி காரின் பாகம்


பிள்ளைகளை செல்லமாக வளர்க்கிறேன் பேர்வழி என அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கித் தந்துவிட்டு பின்னர் காலத்துக்கும் சோகத்தை சுமந்து கொண்டு இருக்க வேண்டிய துயர நிலை ஏற்படுவதை.பெற்றோர்கள் நினைத்தால் தவிர்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளி மாணவர்களுக்கு இள வயதிலேயே பெரிய வண்டிகளை வாங்கித் தருகிறார்கள், கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு உயர் திறன் கொண்ட பைக்குகளை வாங்கித் தருகிறார்கள்.

ஓசூர் எம்.எல்.ஏவின் மகன்


கல்லூரி வயதில் வண்டி தேவை என்ற போதிலும் 100சிசி பைக்குகளை வாங்கித் தரலாம். அதை விட்டு விட்டு கெத்தாக செல்ல வேண்டும் என பிள்ளைகள் அடம் பிடிப்பதாக கூறி உயர் திறன் கொண்ட வண்டிகளை வாங்கித் தருகிறார்கள் பெற்றோர்கள். பக்குவமில்லாத பிள்ளைகள் இந்த வண்டிகளை சாலைகளில் கொண்டு சென்று அதிக வேகத்தில் இயக்கி விபத்துகளில் சிக்கிவிடுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் பெற்றோர் மீது குற்றம்சுமத்துகின்றனர்.

ஆனால் அவர்கள் கூறுவதும் ஏற்கத்தக்க ஒன்றாகவே இருக்கிறது. பெற்றோர் பொறுப்புடன் யோசித்து செயல்பட்டால் விலைமதிப்பற்ற உயிர்கள் காக்கப்படும். வாழ்நாள் முழுதும் துயரத்தையும் சுமக்கத் தேவையில்லை. பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்....
Published by:Arun
First published: