இரும்புத் தாதுவை உருக்கி விவசாய கருவிகள் மற்றும் ஆயுதங்களை பண்டைய தமிழர்கள் செய்துள்ளனர். ஒசூர் அருகே இரும்புத்தாதுவை உருக்கும் தொழில் கூடம் இருந்ததற்கான தடயங்கள், பயன்படுத்தியதற்கான மண் குழாய்கள், இரும்புக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 4,200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இரும்பு பயன்பாட்டில் இருந்தது என்பதை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை பகுதியில் நடத்தப்பட்டுவரும் முதல் கட்ட அகழ் ஆய்வில் தெரியவந்துள்ளது. தொல்குடி தமிழர்கள் தொடக்க காலத்திலேயே இரும்பை பயன்படுத்தி விவசாய கருவிகள் மற்றும் ஆயுதங்கள் செய்து விவசாய வேளாண் பணிகளை செய்துள்ளனர் என்பது இதன் மூலம் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மயிலாடும்பாறையில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் ஓசூர் அருகே கெலமங்கலம் ராயக்கோட்டை சாலையில் பாவாடரப்பட்டி கிராமத்தை ஒட்டியுள்ள மலைக்குன்று ஒன்றில் தொல்குடி தமிழர்கள் இரும்பை பயன் படுத்தியதற்கான அடையாளமாக இரும்புத் தாதுக்களை உருக்கும் தொழில் கூடம் இருந்ததற்கான தடயங்கள் மற்றும் இரும்பு பயன்படுத்திய சுடுமண் குழாய்கள், இரும்பு கழிவுகள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது.
இதனை ஓசூரை சேர்ந்த அறம் வரலாற்று ஆய்வு மையம் குழுவினர் கண்டறிந்துள்ளனர். முன்னாள் தொல்லியல் கழக மாணவர் பாடலாசிரியர் அறிவுமதி, மற்றும் அறம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் அறம் கிருஷ்ணன் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் அப்பகுதிக்கு சென்று நேரடி கள ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த மலைக்குன்றில் 20 அடி அகலத்தில் இரும்பு கழிவுகள் மற்றும் சுடுமண் குழாய்கள் ஏராளமாக கிடந்தன.
இதையும் படிங்க: வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் புகை பிடிப்பான் கண்டறிவு
தோண்டத்தோண்ட சுடுமண் குழாய்களும், இரும்பு கழிவுகளும் பூமியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டன. மேலும் மலைக்குன்றின் அருகே உள்ள வயல் வெளிகளிலும் இரும்பு கழிவுகளும், பழங்கால பானை ஓடுகளும் அதிக அளவில் காணக்கிடக்கின்றன.
இதுகுறித்து வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறும்போது, இங்கு காணப்படும் இரும்பு பொருட்களை கொண்டு பழங்கால தொல்குடி தமிழர்கள் இங்கு இரும்பு தொழில் கூடத்தை அமைத்து கொதிகலன்களின் மூலம் இரும்பு தாதுக்களை உருக்கி, இரும்பு கசடுகளை பிரித்தெடுத்து, உருகிய இரும்பை சுடுமண் குழாய்கள் மூலம் செலுத்தி அச்சு வார்ப்பில் நிரப்பி வைத்து தங்களுக்கு தேவையான விவசாய கருவிகள் மற்றும் ஆயுதங்களை செய்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது.
அதனால்தான் இந்த இடத்தில் இரும்பு கழிவுகளும், இரும்பு பொருள்களை செய்ய பயன்படுத்திய சுடுமண் குழாய்களும் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. தமிழக தொல்லியல்துறை அதிகாரிகள் இந்த இடங்களில் கள ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றனர். மேலும் இந்த மலைக்குன்றின் அருகே 100 மீட்டர் தொலைவில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நடுகற்கள் உள்ளது. இந்த நடுகல்களில் வீரன் ஒருவன் இரும்பு வேல் கொண்டு கால்நடைகளை தாக்க வந்த புலியை குத்தி தாக்குவது போல சிற்ப காட்சி உள்ளது.
மேலும் படிக்க: குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!
நமது தொல்குடி தமிழர்கள் மலைகளில் இருந்து கீழே இறங்கி விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர். விவசாயத்திற்கு தேவையான இரும்பை சங்ககாலத்திற்கு முன்பே இரும்புகாலம் பெருங்கற்காலத்தில் அவர்கள் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர். அதற்கான சான்றுதான் தற்போது கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது என்றனர்.
செய்தியாளர்: செல்வா- ஓசூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.