தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் அதிகளவில் கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா நோய்த்தொற்றும், மரணங்களும் அச்சத்தை ஏற்படுத்திகிறது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது. தங்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமரிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவைக்கு 104 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் போன்ற கோவிட் -19 சிகிச்சை அளிக்கும் இடங்களில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்திலுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன.
ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிப்பதற்காக மருத்துவ ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் விரைவாக மருத்துவமனைகளை வந்தடைய தேவைப்படும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அத்தகைய மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்களில் ஏற்படும் மருத்துவ ஆக்சிஜன் வழங்கல் தொடர்பான சிக்கல்களை தீர்க்க மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் 24 மணி நேரமும் இயங்கும் கால் செண்டரை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் உடனடியாக 104 என்ற எண்ணில் உதவிக்கு அழைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆக்சிஜன் தொடர்பான
மருத்துவ உபகரணங்கள் மீதான இறக்குமதி வரியையும் கொரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியையும் ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.