சேலத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது . இந்த கடிதம் தொடர்பாக சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள் .
டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதம் சேலத்திலிருந்து அனுப்பப்பட்டு உள்ளது. கடிதத்தில் பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனே இது குறித்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா மற்றும் மத்திய புலனாய்வுத்துறை போலீசார் விசாரிக்க உத்தரவிட்டனர்.
அதன்பேரில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலத்தில் எங்கிருந்து மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது? அதை அனுப்பியவர் யார்? அவரது முகவரி குறித்து விசாரணை நடத்தினர். அந்த கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்த கடிதத்தில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த ஒருவரின் முகவரியும் இடம்பெற்று இருந்தது.
மத்திய புலனாய்வு பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருடன் சென்று அந்த முகவரியில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் மிரட்டல் கடிதம் தான் அனுப்பவில்லை என்றும், தனது பெயரில் யாராவது அனுப்பி இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெயரில், 2014 ஆம் ஆண்டு கன்னங்குறிச்சியை சேர்ந்த உறவினர் ஒருவர் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பி இருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இதனால் தனது உறவினர் மிரட்டல் கடிதம் அனுப்பி இருக்கலாம் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதையும் படிங்க: கணவன் மனைவியை சேர விடாமல் தடுத்த மாமியார்... கொடூரமாக கொலை செய்த மாப்பிள்ளை
இதனை அடுத்து கன்னங்குறிச்சிக்கு சென்ற போலீசார், அந்த நபரின் உறவினரான ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் பழனிசாமியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர், தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறார். எனவே அந்த பேராசிரியர் தான் மிரட்டல் கடிதம் அனுப்பி வைத்தாரா? அல்லது வேறு யாராவது அனுப்பினார்களா? எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பழனிச்சாமி (வயது 85) சேலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பழனிசாமியின் மகன் மோகனவேல் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்தார். அவர் 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார் . மகன் இறந்ததிலிருந்து பழனிச்சாமி மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
பிரதமர் அலுவலகத்துக்கு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் இருந்து இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதால் சேலம் தலைமை தபால் நிலையத்திற்கு காவல் துறை அதிகாரிகள் சென்று விசாரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PMO office, Salem