இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள நிலங்கள் குறித்த விவரம் இணையத்தில் வெளியீடு

கோவில்(மாதிரிப் படம்)

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில் நிலங்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 40,000-த்துக்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. ஆனால், அதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலங்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பல காலமாக கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. மேலும், அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் உள்ளன.

  இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர் பாபு, கோயில் சொத்துகள் குறித்து வெளிப்படைத்தன்மையாக இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் ஆகும். இந்நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

  திருக்கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள "தமிழ்நிலம்" மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த விவரங்கள் இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் நாளை வெளியிடப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களின் விவரங்கள் வெளியீடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலம் தொடர்பான விவரங்களை இந்து சமயம் மற்றும் அறநிலைத் துறை அதிகாரப்பூர்வ இணையதளமான www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்கலாம்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முன்னதாக, சென்னை சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடி ஆகும். அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டு வாகன நிறுத்தமாக பயன்படுத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்டது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: