தேனியில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைக்கும், கழுதைக்கும் மாலை மாற்றி திருமணம் நடத்தி வைத்த இந்து எழுச்சி முன்னணியினர் காதலர் வாழ்த்து மடலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக காதலர் தினம் பிப்ரவரி 14-ல் கொண்டாடப்படுகிறது. ஆனால் கலாச்சார சீரழிவு என்று பல்வேறு இந்து அமைப்புகள் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பாக காதலர் தினத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கழுதைக்கும், கழுதைக்கும் மாலை மாற்றி திருமணம் நடத்தி வைத்தனர்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள சிவன் ஆலயம் முன்பாக நடைபெற்ற இந் நிகழ்வைத் தொடர்ந்து காதலர் தினத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் காதலர் தின வாழ்த்து மடல்களை கழுதைக்கு உணவாக அளித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாழ்த்து மடல்களை தீயிட்டு எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் ரவி கூறுகையில், நம் நாட்டிற்கு அன்பும், காதலும் தேவைப்படுகிறது. உண்மையான காதலை நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக காதல் என்ற போர்வையில் நடைபெறும் கலாச்சார சீரழிவு மற்றும் பெற்றோரின் கனவுகளை அழிக்கும் செயலில் ஈடுபடுவதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். மேலும் இன்றைய தினத்தில் கோவை குண்டுவெடிப்பில் உயிரிழப்பு பொதுமக்கள் மற்றும் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்பதாக கூறினார்.
இந்து மக்களின் மனநிலையை பிரதிபலித்த பாஜக கல்யாணராமன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.