பெண் கொடுக்காததால் சிறுமியை சினிமா பாணியில் கடத்திய இந்து முன்னணி நிர்வாகி - தர்ம அடி கொடுத்த மக்கள்!

ஊர் மக்கள் ஒன்றுகூடி, நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர். 

பெண் கொடுக்காததால் சிறுமியை சினிமா பாணியில் கடத்திய இந்து முன்னணி நிர்வாகி - தர்ம அடி கொடுத்த மக்கள்!
ஊர் மக்கள் ஒன்றுகூடி, நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்று சிறுமியை பத்திரமாக மீட்டனர். 
  • News18
  • Last Updated: September 19, 2019, 7:41 PM IST
  • Share this:
மணப்பாறை அருகே தந்தையுடன் சென்ற 17 வயது சிறுமியை, இந்து முன்னணி நிர்வாகி சினிமா பாணியில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ளது நடுப்பட்டி வயக்காடு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கணபதி, தனது இரண்டு மகள்களுடன் பொன்னம்பலம்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் மினரல் வாட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு பணி முடிந்து, 17 வயதுடைய மூத்த மகளுடன், தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினார்.


அப்போது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மினரல் வாட்டர் நிறுவனத்தில் இருந்து சற்று தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஆம்னி வேனில் வந்த 6 பேர் வழி மறித்து, அந்த பகுதியில் உள்ள முகவரி ஒன்றை கேட்டுள்ளனர்.

வாகனத்தை நிறுத்தி கணபதி முகவரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சிறுமியை இழுத்து ஆம்னி வேனிற்குள் ஏற்றியுள்ளனர்.

இதை சற்றும் எதிர்பாராத கணபதி, இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த கும்பல் சிறுமியை வேனில் கடத்திக்கொண்டு புறப்பட்டது.பின்னால் துரத்திக்கொண்டு ஓட, வேனில் தொங்கியபடியே கணபதி சிறிது தூரம் சென்றுள்ளார். பின்னர் கதவை திறந்து காருக்குள் ஏறி மகளை காப்பாற்ற முயன்றார்.

சிறுமி மற்றும் அவரது தந்தையின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் பின்னால் துரத்திச் சென்றனர்.

ஆனால் அந்த கடத்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது தந்தையுடன் தேசிய நெடுஞ்சாலை, கிராமப் பகுதி என மின்னல் வேகத்தில் பறந்து சென்றனர். விடாமல் கிராம மக்களும் துரத்திச் சென்றனர். செல்போன் மூலமாக அடுத்தடுத்த கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்து சாலைகளின் குறுக்கே கற்கள், மரக்கட்டைகளை போட்டு தடுத்தனர்.

இதனால் கீரனூர் அருகே பக்கிரி கரடு என்ற இடத்தில் வேனை நிறுத்திவிட்டு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பித்து ஓடினர். 6 பேரில் 3 பேர் ஓடிவிட, மூன்று பேரை பொதுமக்கள் பிடித்தனர்.

வேனில் இருந்த சிறுமி மற்றும் அவரது தந்தையை பொதுமக்கள் மீட்டனர். பிடிபட்ட 3 பேரை பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

சிறுமியை கடத்த பயன்படுத்திய ஆம்னி வேனையும் அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளிவிட்டு கவிழ்த்தனர். தொடர்ந்து, திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே இது போன்று ஒரு மாற்றுத்திறனாளி பெண் கடத்தப்பட்டதாகவும், அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால், இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருக்காது எனக்கூறி மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருப்பினும் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 3 பேரை போலீசாருடன் அனுப்ப மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

கடத்தல் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதை அடுத்து பிடித்து வைத்திருந்த 3 பேரையும் போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மணப்பாறை அடுத்த அமயபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான தினேஷ், சிதம்பரத்தான்பட்டியைச் சேர்ந்த 19 வயதான கிளம்பன் சூர்யா, பூமாலைப்பட்டியைச் சேர்ந்த 22 வயது கிருபாகரன் என்பது தெரியவந்தது.

சிறுமி கடத்தல் தொடர்பாக அவர்களிடம் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

சிறுமியை கடத்தி தப்பி ஓடிய மூன்று பேரில் ஒருவரான குழந்தைவேலு சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்து முன்னணி வையம்பட்டி ஒன்றியச் செயலாளரான குழந்தைவேலு, இரண்டு தினங்களுக்கு முன்னர் கணபதி வீட்டிற்கு சென்று சிறுமியை பெண் கேட்டுள்ளார். அதற்கு கணபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் சிறுமியை கடத்த நண்பர்களுடன் சேர்ந்து குழந்தைவேலு திட்டமிட்டுள்ளார். சுங்கச்சாவடி அருகே அமர்ந்து, வேலைக்கு செல்லும்போது, திரும்பி வரும்போதும் அவர்கள் நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர் புதன்கிழமை இரவு பணி முடித்து வீடு திரும்பும்போது கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்தது.

இதை அடுத்து தப்பி ஓடிய குழந்தைவேலு, செல்லபாண்டி, பிடிபட்ட 3 பேர் உட்பட 6 பேர் மீது ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பிடிபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், தாக்குதலில் காயமடைந்த தினேசை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பி ஓடிய குழந்தைவேலு உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடத்தல் சம்பவமும், அவர்களை சேஸ் செய்து கிராம மக்கள் பிடித்த விதமும் சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்தது. துரிதமாக செயல்பட்டு கடத்தப்பட்ட சிறுமியை மீட்ட கிராம மக்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Also see...

First published: September 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்