முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதலமைச்சர் மீதான புகார் சிபிஐ-க்கு மாற்றம்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் மீதான புகார் சிபிஐ-க்கு மாற்றம்- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு புகாரை, சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Last Updated :

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு புகாரை, சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகள் அமைக்க மற்றும் பராமரிப்பதற்கான ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினருக்கும், அவருக்கு வேண்டிய நிறுவனங்களுக்கும் வழங்கியதாக திமுக குற்றம்சாட்டியது. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி, கடந்த ஜூன் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

இருப்பினும் முதலமைச்சர் மீதான இந்தப் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக கூறப்பட்டது. இதனால், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக்கோரி, ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

திமுக கூறும் குற்றச்சாட்டில் எந்தவித முகாந்திரம் இல்லை என்றும் ஒப்பந்த நடவடிக்கை முழுவதும் கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டிருப்பதால், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது, நெடுஞ்சாலைத்துறை, காவல்துறை ஆகிய இரண்டு துறைகளுமே முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளபோது, விசாரணை எப்படி நேர்மையாக நடைபெறும் என நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கட்டுப்பாட்டில் வராது எனக்கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், விசாரணை பாரபட்சமின்றி தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லையென தெரிவித்த நீதிபதி, வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சிபிஐ வசம் ஒப்படைக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டதோடு, ஆரம்பகட்ட விசாரணையை 3 மாதங்களில் முடித்து, அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சிபிஐ-க்கு கெடு விதித்தார். அந்த அறிக்கையில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யலாம் என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா சிபிஐ-க்கு அறிவுறுத்தினார்.

முதலமைச்சர் மீதான முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Case, CBI, Chennai High court, Cm edappadi palanisamy, Highway tender issue