தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது.
நடப்பாண்டின் முதல் கூட்டதொடர் என்பதால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் பேரவை கூட்டம் காலை 11 மணிக்குத் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
ஆளுநர் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு முதலமைச்சர், அனைத்து அமைச்சர்கள், அரசு இயந்திரம் குறிப்பாக, சுகாதாரம், வருவாய் காவல், உள்ளாட்சி அமைப்புகள், மற்றும் ஏனைய துறைகளில் முன்கள பணியாளர்கள் இணைந்து ஒரு அணியாக அயராது உழைத்து உள்ளதை மனமார பாராட்டுகிறேன்.
கொரோனா நிவாரணம் மற்றும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை 13 ஆயிரத்து 208 கோடி ரூபாய் தனது சொந்த நிதி ஆதாரங்களிலிருந்து தமிழ்நாடு அரசு செலவிட்டுள்ளது.
பிற மாநிலங்களை போல் இல்லாமல் தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதப்படுத்தவோ குறைக்கவோ இல்லை. உரிய நேரத்தில் செலவு குறைந்த கடன்களை பெற்று அதன் மூலம் கொரோனா தொற்று நோயின் கடுமையான தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டு மக்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்து உள்ளது.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளில் தமிழ்நாட்டின் உரிமைகளை இந்த அரசு தொடர்ந்து பாதுகாக்கும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி பெரியாறு ஆற்றின் குறுக்கே எந்த ஒரு புதிய அணையையும் கட்டுவதற்கு கேரள மாநிலத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
காவிரி -தெற்கு வெள்ளாறு இணைப்பின் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அத்திக்கடவு அவிநாசி நீரேற்று பாசன திட்டத்திற்கு 1,652 கோடி ரூபாயை அரசு ஒப்பளிப்பு செய்துள்ளது. இந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன 21ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் முதற்கட்ட பணிகள் நிறைவேற்றப்படும்.
இதேபோன்று மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு 100 வரண்ட ஏரிகளை நிரப்புவதற்காக ‘சரபங்கா நீரேற்று பாசன திட்ட பணிகள்’ 165 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதன் காரணமாக 4 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இலங்கை நாட்டின் காவலில் இருக்கும் மீதமுள்ள 12 மீனவர்களையும் மீட்டெடுக்க அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்ததில் முதலமைச்சரின் முயற்சிகளையும் ஈடுபாட்டையும் பாராட்டுகிறேன்.
தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக புதிய தொழில் கொள்கைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது இந்த கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
மேலும் படிக்க... ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக-காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 50:50 பகிர்வு அடிப்படையில் மத்திய அரசு தங்களுடைய பங்கு மூலதனத்திற்கு ஒப்புதலை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம். என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.