• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டல்.. ஹோமியோபதி மருத்துவர் தற்கொலை..

அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டல்.. ஹோமியோபதி மருத்துவர் தற்கொலை..

தேனி மாவட்டத்தில் மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால், ஹோமியோபதி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மருத்துவர் தற்கொலையின் முழுப் பின்னணி என்ன?

  • Share this:
    சட்டப்படி அனைத்து ஆவணங்களுடனும் முறையாக ஹோமியோபதி மருத்துவத் தொழில் பார்த்து வந்த சீனிவாசனிடம், மாதா மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கும்படி மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர் லெட்சுமணன் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. மன உளைச்சலால் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கண்ணீர் புகார் அளித்துள்ளார். மருத்துவருக்கு நடந்தது என்ன?

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் 50 வயதான சீனிவாசன்; ஹோமியோபதி மருத்துவராக உள்ளார். இவர் தனது வீட்டிலேயே கடந்த 20 ஆண்டுகளாக ஹோமியோபதி கிளினிக் நடத்தி வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை காலை தனது அறையில் சீனிவாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் லட்சுமிபுரம் கிராம மக்கள், மருத்துவர் சீனிவாசனின் மரணத்திற்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலைக் கைவிட வைத்தனர்.

    மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநரான லட்சுமணன், தனது கணவரிடம் மாதா மாதம் 20 ஆயிரம் கேட்டு வாங்கியதாகவும் தொடர்ந்து 50 ஆயிரம் ரூபாய் மாதம் தர வேண்டும் என நெருக்கடி கொடுத்ததாகவும் அதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் சீனிவாசனின் மனைவி சாந்தி.

    பணம் தராவிட்டால், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர் எனப் பொய்யான வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் லட்சுமணன் மிரட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சாந்தி.

    கொரோனா காலகட்டத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஹோமியோபதி மருத்துவம் மூலம் சிறந்த சேவையாற்றிய சீனிவாசன் அப்பகுதி மக்களின் அன்பைப் பெற்றவர் என்று கூறப்படுகிறது.

    மருத்துவர் சீனிவாசன் தற்கொலை குறித்து சென்னை மருத்துவப் பணிகள் துணை இயக்குனர் சம்சாத் பேகம், பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள நிலைய இயக்குனர், மருத்துவமனை கண்காணிப்பாளர், மற்றும் இணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தியுள்ளார்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பெரியகுளம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: