உயர்கல்வி பயிலும் பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகை குறைப்பு எதிரொலி- குறையும் மாணவர் சேர்க்கை

மாணவர்கள்(மாதிரிப் படம்)

உயர்கல்வியில் சேரும் பட்டியலின மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த 4 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையில் நிலுவையும் வைக்கப்பட்டதால் மாணவர்களது கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டியலின மாணவர்கள் உயர் கல்வியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் என்கிற கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 60% நிதியை மத்திய அரசும் 40 சதவீத நிதியை மாநில அரசும் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.

இந்த திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பட்டியலின மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வந்த நிலையில் தற்போது உதவி தொகை குறைக்கப்பட்டதால் மாணவர்கள் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கருத்து முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் பட்டியலின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்காக 1,884 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 1,932 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போதைய நிதி நிலை அறிக்கையில் கல்வி உதவித் தொகை 48 கோடி ரூபாயை அரசு குறைத்துள்ளது.

குறைக்கப்பட்டுள்ள கல்வி உதவித்தொகைக்கான நிதியை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார்  அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தின் மாநில அமைப்பாளரான பரதன்.

கடந்த 2018-2019ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை 51 மற்றும் 52 என்கிற அரசாணையை அமல்படுத்தியது. இதன்காரணமாக பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 85,000 ரூபாய் கல்வி உதவித்தொகை குறைக்கப்பட்டு தற்போது 50,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக கல்வி பயில்வதில் பல்வேறு சவால்களை சந்திக்க நேரிடுவதாக கூறும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்டு வந்த 85,000 ரூபாய் உதவித்தொகையை மீண்டும்  வழங்க வேண்டும் என்றும் மேலும் கடந்த 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட உதவித்தொகையில் நிலுவையில் உள்ள 35,000 ரூபாயை தலா ஒவ்வொரு மாணவருக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிதி ஒதுக்கீடு குறைப்பால் மாணவர் எண்ணிக்கை சரிந்துள்ளது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.

பொறியியல்:

2017-2018  ம் ஆண்டில் மாணவர் சேர்க்கை 8.14 லட்சமாக இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து 2019-2020ம் ஆண்டில் 6.65 லட்சமாக சரிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது

2017-2018ம் ஆண்டில் 2.75 லட்சமாக இருந்த  மாணவர் சேர்க்கை குறைந்து 2018-2019ம் ஆண்டில் 2.67 லட்சமாக குறைந்துள்ளது ஆதிதிராவிட நலத்துறையின் புள்ளிவிவரங்கள் மூலம்  தெரியவந்துள்ளது.
Published by:Karthick S
First published: