பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வர்ணபேதத்தை பாதுகாக்க நினைப்போருக்கு கார்ல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்தாகத்தான் இருக்கும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை, அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மனிதர்களை பிறப்பால், சாதியால், நிறத்தால், பாலினத்தால் பணத்தால் பாகுபடுத்திப் பார்க்காமல் உரிமைகளை வழங்க வேண்டும் என்கிற பரந்த மானுடப் பார்வை கொண்ட பொதுவுடைமை கருத்தியலை வழங்கியவர் கார்ல் மார்க்ஸ் என்றும் வேதாளம் முருங்கை மரம் ஏறியதைப் போல் காரல் மார்க்ஸ் பற்றி தேவையற்ற கருத்தை ஆளுநர் ரவி தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வர்க்க பேதமற்ற சமத்துவமே திராவிட இயக்கத்தின் இறுதி இலக்கு என்ற லட்சியத்தை மேற்கொண்டவர்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் எனக் கூறியுள்ள பொன்முடி அவர்கள் வகுத்த சமூக நீதிப் பாதையை தேர்ந்தெடுத்து பயணம் செய்தவர் முத்தமிழறிஞர் கருணாநிதி என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வர்ண பேதத்தை பாதுகாக்க நினைப்போருக்கு, மார்க்ஸ் கருத்துகள் கசப்பு மருந்துதான் என்றும் அதை விழுங்க முடியாமல் வாந்தி எடுப்பது போல் ஆளுநர் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல, முறையுமல்ல என்றும் பொன்முடி கூறியுள்ளார்.
மேலும் பாஜக சார்பில் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடந்த போராட்டத்தில் பங்கேற்க செய்யப்பட்ட முன்னாள் ராணுவத்தனிரின் கோரிக்கையை ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுவது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ராஜ்பவனை காபி ஷாப் போல் மாற்றி, உலகத் தலைவர்களையும், தமிழகத்தின் மாண்பினையும் சிதைப்பதை நிறுத்தி, அவருக்குரிய வேலையை பார்ப்பதே மக்கள் வரிப்பணத்தில் அவர் பெறும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Minister Ponmudi, RN Ravi, Tamilnadu