• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர் சேர்க்கை கூடாது – அன்புமணி

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டும் மாணவர் சேர்க்கை கூடாது – அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மட்டும் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்றும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசின் மிகவும் பிற்போக்குத்தனமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டபோது, 11-ம் வகுப்பு மதிப்பெண்கள், 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் ஒன்றாக சேர்த்து தான் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது நடப்பாண்டில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 11-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது; 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டும் தான் கணக்கில் கொள்ளப்படும் என்று அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது தெரியவில்லை.

    11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கடந்த ஆண்டில் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றது. இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உள்ள 90% தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்புப் பாடங்கள் நடத்தப்படுவதில்லை என்பதால் தான். 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என்பதற்காக, 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படுவதால் அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.

    உயர்கல்விக்கு 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஒன்றாக கணக்கிட்டு, அதனடிப்படையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை நடத்தினால் தான் 11-ம் வகுப்பு பாடங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். அதற்கு மாறாக, 11-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படாது என்று அரசின் அறிவிப்பு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்துவிடும்.

    தமிழக அரசின் புதிய முறை நடைமுறைக்கு வந்தால் தனியார் பள்ளிகளில் 11-ம் வகுப்பிலேயே 12-ம் வகுப்புப் பாடங்களை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்துவிடும். 11-ம் வகுப்பில் குறைந்தபட்சம் தேர்ச்சி பெறும் அளவுக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, மீதமுள்ள காலங்களில் 12-ம் வகுப்புப் பாடங்கள் மட்டுமே தனியார் பள்ளிகளில் நடத்தப்படும்.

    பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பாடங்களுக்கும், நீட், ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களுக்கும் 11-ம் வகுப்பு பாடம் தான் அடிப்படை என்பதால், 11-ம் வகுப்பில் பாடங்கள் முழுமையாக நடத்தப்படாவிட்டால் உயர்கல்வி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சாதிக்க முடியாத அவலநிலை ஏற்பட்டு விடும்.

    11-ம் வகுப்புக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதியப் பாடத்திட்டம் சற்று கடினமாக இருப்பது உண்மை தான். புதியப் பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் போது இவ்வாறு நடப்பது இயல்பு தான். இதற்கான தீர்வை காண்பதை விடுத்து 11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளத் தேவையில்லை என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 11-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: