மாற்றுமத வழிபாட்டு தலங்கள் இருப்பதால் கோவில் ஊர்வலங்களுக்கு தடை விதிக்க முடியாது!

கோவில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளது

கோவில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளது

  • Share this:
    கோவில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என கருத்து தெரிவித்துள்ளது.

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் கிழக்கு பகுதியில் இஸ்லாமியர்களும், மேற்கு பகுதியில் இந்துக்களும் வசித்து  வருகின்றனர். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், செல்லியம்மன் கோவில், ராயப்பா கோவில், மாரியம்மன் கோவில் என நான்கு கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி, அந்த கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி உடையார் என்பவரும், எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வால் ஜமாத் சார்பிலும்  வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

    வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள்  நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து  கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் உத்தரவிட்டார்.

    மேலும் படிக்க... தமிழகத்தில் இன்றும் நாளையும் இரவு 9 மணிவரை கடைகள் செயல்பட அனுமதி

    இந்த உத்தரவை எதிர்த்து இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள்  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கோவில் விழாக்களை ஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர,  தடை விதிக்க முடியாது எனவும், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கூறி, பல
    ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும் என  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல எனவும், மாற்று மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

    கோவில் ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து ஊர்வலங்களும், அனைத்து சாலை, தெருக்களில் அனுமதிக்க வேண்டும் எனவும், ஒரு பிரிவினரின் வழிபாட்டுத் தலம் உள்ளதால், அந்த பகுதி வழியாக மற்றொரு பிரிவினர் ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவிட்டு, இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும்  நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: