முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: எச்சரிக்கைவிடுத்த சென்னை உயர் நீதிமன்றம்

குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: எச்சரிக்கைவிடுத்த சென்னை உயர் நீதிமன்றம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு என்று குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து கேன்களில் அடைத்து விற்கும் ஆலைகளை இன்றைக்குள் மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருச்சி, தஞ்சாவூர், நாகை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் ஆலைகளை மூடி மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நடவடிக்கைகளைக் கண்டித்தும் அனைத்து ஆலைகளுக்கும் அனுமதி வழங்கக் கோரியும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் குடிநீர் கேனை மட்டுமே பெரிதும் நம்பியுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சென்னையில் பல இடங்களில் எந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமாவது திறந்திருக்குமா என தள்ளு வண்டிகள், லோடு ஆட்டோக்களில் காலி கேன்களோடு மக்கள் அலைந்து திரிகின்றனர்.

இதற்கிடையே, அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட உத்தரவிட கோரும் வழக்கில் அரசுக்கு நீதிமன்றம் அளித்த கெடு இன்று நிறைவடைவதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குடிநீர் ஆலைகள் கடந்த காலங்களில் செய்த சட்டவிரோத செயல்களுக்கு உரிய விலையைக் கொடுக்க வேண்டாமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நிலத்தடியில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவிற்கு ஏற்ப குடிநீர் நிறுவனங்களுக்கு ஏன் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், மாநிலத்தின் இயற்கை வளமான தண்ணீரை இலவசமாக எடுக்க அனுமதிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மூடப்பட்ட ஆலைகளை தற்காலிகமாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் மொத்தம் 552 குடிநீர் ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளது.

போராட்டம் மூலம் நீதிமன்றத்துக்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைப்பது தவறு என்றும் குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also see...

First published:

Tags: Drinking water