ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எந்த மொழியில் கடிதம் அனுப்பப் படுகிறதோ, அதே மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

எந்த மொழியில் கடிதம் அனுப்பப் படுகிறதோ, அதே மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

மதுரை உயர்நீதிமன்ற கிளை

மதுரை உயர்நீதிமன்ற கிளை

ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு, மத்திய அரசு அதிகாரிகள் அதே மொழியில் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்டோர்  மத்திய அரசு அதிகாரிகளுக்கு  பல்வேறு கோரிக்கை தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு,  மத்திய அரசு அதிகாரிகள் ஆங்கிலத்திலேயே பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பொது நல மனு  ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மத்திய ரிசர்வ் படையின் குரூப் "பி" மற்றும் குரூப் "சி"  பிரிவுகளைச் சார்ந்த 780 அகில இந்தியப் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு 20.12.2020 அன்று நடைபெறுமென்று வெளியிடப்பட்டிருந்து. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒரு தேர்வு மையம் கூட இல்லை. இது குறித்து நான் தமிழக  உள்துறை அமைச்சகத்திற்கும், CRPF  பொது இயக்குனருக்கும் 09.10.2020 அன்று கடிதம் எழுதியிருந்தேன்.

தமிழ்நாடு, புதுச்சேரி விண்ணப்பதாரர்களின் நலன் கருதி குறைந்த பட்சம் ஒரு மையத்தை இவ்விரு பகுதிகளுக்கும் அறிவிக்குமாறு கடிதம் அனுப்பி இருந்தேன். அதற்கு இந்தியில் மட்டுமே பதில் அனுப்பி இருந்தனர். இது போன்று, தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கிற நடைமுறை தொடர்ந்து இருந்து வருகிறது.

இது அரசியல் சாசனம் 19 (1) (அ) வழங்கியிருக்கிற உரிமைகளுக்கும், 1963 அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும். இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும். 1963 அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 ன் படி இந்திய ஒன்றியம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, அக் குறிப்பிட்ட மாநிலம் இந்தியை அலுவல் மொழியாக ஏற்காத பட்சத்தில், ஆங்கிலமே அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

சு.வெங்கடேசன்

தமிழ்நாடு இந்தியை அலுவல் மொழியாக ஏற்க வில்லை.  தமிழையும், ஆங்கிலத்தையும் அலுவல் மொழிகளாக ஏற்று அதிகாரப் பூர்வமாக சட்டமும் தமிழகத்தில் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுடனான இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடர்ந்தும் வருகிறது. அலுவல் மொழிச் சட்டம் பிரிவு 3 (5) மத்திய அரசின் அலுவல் தேவைகளுக்கும், நாடாளுமன்றத்தின் பயன்பாடுகளுக்கும் ஆங்கிலம் தொடர்வது பற்றி மிகத் தெளிவாகக்  குறிப் பட்டுள்ளது.

இந்தியை  அலுவல் மொழியாக  ஏற்று ஆங்கிலத்தை தொடர்வதில்லை என்று முடிவு செய்யாத நிலையில் மாநிலங்களுக்கான தகவல் பரிமாற்றங்கள் ஆங்கிலத்திலேயே அமைய வேண்டும் என்பதே சட்டபூர்வமானது. எனவே, தமிழக அரசு,  தமிழக மக்கள், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மத்திய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் இந்தியில் இருக்கக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

09.11.2020 தேதியிட்ட மத்திய உள்துறை இணை அமைச்சரின் கடிதத்தின் ஆங்கில வடிவம் உடனே வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு, தமிழக மக்கள், தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். அலுவல் விதி முறைகளை மீறுகிற அரசு அதிகாரிகள் மீது  உரிய  நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும் என உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

Must Read : அரசு மருத்துவமனைகளில் பணி செய்ய உயர் சிறப்பு மருத்துவர்களிடையே குறையும் ஆர்வம்!

இந்த மனு நீதிபதிகள் என.கிருபாகரன்,  எம். துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுமீது விசாரணை நடத்திய நீதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்  உள்ளிட்டோர்  மத்திய அரசு அதிகாரிகளுக்கு  பல்வேறு கோரிக்கை தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு,  மத்திய அரசு அதிகாரிகள் அதே மொழியில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மேலும், அவ்வாறு ஆங்கிலத்தில் பதில் அளிக்காவிட்டால்,  அது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் மொழிவாரியாகதான்  மாநிலங்கள் பிரிக்கப் பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் தாய் மொழியில் கல்வி கற்பதும், வெளிப்படுத்துவதும் தான் சிறந்தது என உலகளவில் அனைவராலும் ஒத்து கொள்ளப்பட்ட ஒன்று. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம்தான் இணைப்பு மொழியாக உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்: கருணாகரன்

First published:

Tags: Madhurai high court, Su venkatesan