வைப்புத்தொகை வட்டியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

வட்டி வருமானம்

முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வட்டி சதவீதத்தை அதிகரிக்க பரிசீலிக்க வேண்டும்.

 • Share this:
  கொரோனா ஊரடங்கிற்கு முன்பு வழங்கப்பட்ட வட்டி வீதத்தையே மூத்த குடிமக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில், முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில்கொண்டு, வட்டி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கார்த்திகா அசோக் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொரோனா ஊரடங்கிற்கு முன் மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைக்கு வங்கிகள் 8.5 முதல் 9 சதவீதம் வட்டி வழங்கின. கொரோனா ஊரடங்குக்குப் பின் இந்த வட்டித்தொகை 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொகையை நம்பி வாழும் மூத்த குடிமக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.

  எனவே, வட்டியைக் குறைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஊரடங்குக்கு முன்பு வழங்கப்பட்ட வட்டி வீதத்தை மூத்த குடிமக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த வருமானமும் இல்லாத மூத்த குடிமக்கள், இந்த வைப்புத் தொகை மூலம் கிடைக்கும் மாத வட்டியை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

  வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மூத்த குடிமக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். அதேநேரம், மூத்த குடிமக்களின் வைப்புத்தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்க வேண்டும் என்று முடிவு செய்வது மத்திய அரசின் கொள்கை முடிவாகும். எனவே இது சம்பந்தமாக எந்த உத்தரவையும் எங்களால் பிறப்பிக்க முடியாது.

  Must Read : இந்திய மரபுசாரா எரிசக்தி நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  சென்னை உயர்நீதிமன்றம்


  அதேசமயம், இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு, வட்டி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: