ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடைகோரி திருமாவளவன் மனு - அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு தடைகோரி திருமாவளவன் மனு - அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

திருமாவளவன்

திருமாவளவன்

ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்துவிட்டார்.

தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அனுமதி அளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது. விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.  அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க  முயற்சிக்கிறது என்ற குற்றம்சாட்டியுள்ளார்.

ALSO READ | பந்த், கல்வீச்சு எதிரொலி : தமிழகம் - புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தம்?

அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு அவசர முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் நீதிபதி, ஏற்கனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.

மனுவின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் விசாரிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் அனுமதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக வேண்டுமானால் மேல்முறையீடு செய்யுங்கள் என திருமாவளவன் தரப்பிற்கு அறிவுறுத்தினார்.

Published by:Anupriyam K
First published:

Tags: Chennai High court, HighCourt, RSS, Thol. Thirumavalavan