Home /News /tamil-nadu /

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

Reservation for transgender : அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறை வார்டர்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் தேர்வு தொடர்பாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்தப் பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள் என்ற அடிப்படையில் விண்ணப்பிக்க அனுமதித்த போதும், சம்பந்தப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை ஆண்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் போது, ஆண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் எனவும், பெண்கள் என அடையாளப்படுத்தும் போது பெண்களுக்கான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்தும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையுடன், எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வுகளிலும், கட் ஆப் மதிப்பெண்களிலும் சலுகைகள் வழங்கக் கோரி சாரதா என்பவர் உள்பட மூன்றாம் பாலித்தவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்கள், பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆண்கள் என அடையாளப்படுத்தும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என வேதனை தெரிவித்த நீதிபதி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Read More : ரேலா மருத்துவமனை டாக்டர்கள் இனி அரசு மருத்துமனையில் ஆபரேஷன் செய்வார்கள்.. ஏன்?

மனுதாரர்கள் அனைவரும் ஆரம்பகட்ட தேர்வு நடவடிக்கைகளில் தகுதி பெற்றதாக கருதி, உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளில் பெண்களுக்கான சலுகைகளை வழங்கி, எட்டு வாரங்களில் தேர்வு நடைமுறைகளை முடிக்க வேண்டும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Must Read : இந்த இரண்டு தவிர அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் வாபஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

எதிர்காலத்தில், அரசு பணி நியமனங்களில் சலுகைகள் மட்டுமல்லாமல், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
Published by:Suresh V
First published:

Tags: Chennai High court, Reservation, Transgender

அடுத்த செய்தி