கஸ்தூரிராஜா எழுதிய கடிதம் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்? நீதிமன்றம் கேள்வி!

கஸ்தூரிராஜா எழுதிய கடிதம் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும்? நீதிமன்றம் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இல்லாவிட்டால் வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தனது கடன் தொகையை நடிகர் ரஜினி திருப்பி தருவார் என நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா, சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை தான் தரவில்லை என்றால் ரஜினி தருவார் என கஸ்தூரி ராஜா, முகுந்த்சந்த் போத்ராவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில், பெயரை தவறாக பயன்படுத்திய கஸ்தூரிராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ரஜினிகாந்த்க்கு உத்தரவிடக்கோரி போத்ரா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி , பெயரை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக சம்பந்தப்பட்டவர் தான் வழக்கு தொடர வேண்டுமே தவிர நீதிமன்றம் உத்தரவிட முடியாது என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து முகுந்த்சந்த் போத்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் முகுந்த்சந்த் போத்ரா இறந்து விட்டதால், வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என கஸ்தூரிராஜா தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பணத்தை திருப்பி தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினியை எப்படி கட்டுப்படுத்தும் என மனுதாரர் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

Also read... Chennai Power Cut | சென்னையில் நாளை (19-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இல்லாவிட்டால் வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: