மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்த பிறகு தமிழக இடஒதுக்கீடு முறை அதற்கு எப்படி பொருந்தும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 27 சதவீத இடஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழக கல்லூரிகளுக்கு பொருந்தாது என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்த பிறகு தமிழக இடஒதுக்கீடு அதற்கு எப்படி பொருந்தும்?” என்று கேள்வி எழுப்பினர். பின்னர், “ஒருவேளை அந்த இடங்கள் மீண்டும் மாநில அரசு வசம் வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசின் இடஒதுக்கீடு அதற்குப் பொருந்தும்.
இதுதொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு கூற முடியாது” என்று தெரிவித்தனர். அப்போது, வழக்கறிஞர் வில்சன், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், “மருத்துவ படிப்புகளில் அனைத்து மாநில மாணவர்களும் பயனடையும் நோக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அகில இந்திய ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. தகுதியின் அடிப்படையில் மட்டுமே அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
பட்டியலினத்தவர்களுக்கு 2007-08ஆம் கல்வி ஆண்டு முதல் 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு என்பது கொள்கை முடிவு என்பதால், அதற்கு மத்திய அரசின் இடஒதுக்கீடு மட்டுமே பொருந்தும். மாநில அரசின் இடஒதுக்கீடு பொருந்தாது. இதில் மாநில அரசின் இடஒதுக்கீட்டைப் பின்பற்றினால் குழப்பம் ஏற்படும்.
Must Read : தமிழகத்தின் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி உள்ளன - மத்திய அரசு தகவல்
ஆகவே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றும் தமிழக அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் மாநில அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றக் கோர முடியாது” என்று வாதிட்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வருகிற 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court, MBBS, OBC Reservation