அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, அத்துறையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார், 3 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையில், இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த விசாரணைக்காக, செந்தில் பாலாஜிக்கு எதிரான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள 3 வழக்குகள் தொடர்பான ஆவணங்களை வழங்க கோரி அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த எம்.பி, எம்.எல்.ஏகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், தள்ளுபடி செய்தது.
சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், ஆவணங்களை வழங்க உத்தரவிட கோரியும் அமலாக்கப் பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சான்றளிக்கப்பட்ட குறியீடு செய்யபடாத ஆவணங்களை வழங்க மறுத்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து பின் நகல் வழங்க கோரி அமலாக்க பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதினத்துக்கு பல்லக்கு சுமப்பது எங்கள் சமய உரிமை.. பல்லக்கு சுமப்பவர்கள் திட்டவட்டம்
இதனை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குறியீடு செய்யப்படாத ஆவணங்களை வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் வரும் 9ம் தேதியும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் 12ம் தேதியும், அமைச்சர் செந்தில் பாலாஜியை 13ம் தேதி ஆஜராகும்படி, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்கப் பிரிவின் சம்மனை எதிர்த்து சண்முகம் தாக்கல் செய்த மனுவில், வழக்கில் குறியீடு செய்யபட்டதா ஆவணங்களை அமலாக்க பிரிவுக்கு வழங்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், எந்த வழக்கிற்கான விசாரணை நடைபெறுகிறது என்ற விளக்கத்தை கேட்டும், விசாரனை தொடர்பான ஆவணங்களை வழங்ககோரியும் அமலாக்க பிரிவுக்கு கடிதம் எழுதியும், இதுவரை எந்த பதிலும் இல்லை என்பதால், அமலாக்கப்பிரிவின் சம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வு, ஏற்கனவே குறியீடு செய்யப்படதா ஆவணங்களை வழங்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கப் பிரிவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.