முரசொலி அலுவலக விவகாரம்... விசாரணைக்கு மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக பிரதிநிதி ஆஜராக அனுமதி

  • News18
  • Last Updated :
  • Share this:
முரசொலி நில விவகாரம் தொடர்பாக தேசிய பட்டியலின நல ஆணைய விசாரணைக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக பிரதிநிதி ஆஜராக அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முரசொலி அறக்கட்டளைக்கு சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பா.ஜ.க தரப்பில் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீதான விசாரணைக்கு வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய பட்டியலின ஆணையம் உத்தரவிட்டது.

முரசொலி அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க தேசிய பட்டியலின நல ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் சொத்துகள் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டிலின ஆணையம் விசாரிக்க முடியாது எனவும் முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கை உரிமையியல் நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் எனவும், புகாரளித்த பாஜகவின் மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசன், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அல்ல எனவும், அரசியல் காரணங்களாக அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரை நிராகரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னையில் பஞ்சமி நிலங்கள் இல்லை என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்திருந்ததையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றியைச் சகித்து கொள்ள முடியாமல் பா.ஜ.க இந்த புகாரை அளித்துள்ளதாகவும், தேசிய பட்டியலின ஆணையம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், ஜனவரி 7 ம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பட்டியலின ஆணைய விசாரணைக்கு மு.க.ஸ்டாலினுக்கு பதிலாக அவரது பிரதிநிதி ஆஜாராக அனுமதியளித்து உத்தரவிட்டார்.

மேலும் முரசொலி நிலத்திற்கான பட்டா, கிரயப்பத்திரம், உள்ளிட்ட ஆவணங்களின் விவரங்களை ஆணைய விசாரணைக்கு அனுப்ப தி.மு.க தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, எந்த ஆவணங்கள் அடிப்படையில் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது என பாஜக மாநிலச் செயலாளர் ஸ்ரீனிவாசனுக்கு உத்தரவிட்டார்.

மனுவுக்கு, தேசிய பட்டியலின ஆணையமும், ஆணைய துணைத் தலைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published: