தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய
திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தில், தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட தாமோதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் நிலை குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.