ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக்

டாஸ்மாக்

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நீலகிரியை தொடர்ந்து டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகலமலை, டாப் சிலிப் போன்ற மலைவாசஸ்தலங்களிலும், தேசிய பூங்காக்கள், சரணாலயங்களிலும் ஜூன் 15 ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி இத்திட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 29 லட்சம் பாட்டில் மதுபானங்கள் விற்கப்பட்டதாகவும், அதில் 18.50 லட்சம் காலி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விற்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், 63 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மற்ற மலைவாசஸ்தலங்களில் 59 சதவீத பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் மட்டும் 18.50 லட்சம் காலி பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை ஏன் அமல்படுத்த்க் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த பாட்டில்கள் ஏரிக் கரைகளில் வீசி உடைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், 18.50 லட்சம் பாட்டில்களை எப்படி டிஸ்போஸ் செய்யப் போகிறீர்க்ள் எனக் கேட்டதற்கு, அவற்றை விற்க டெண்டர் கோரியுள்ளதாகவும், இந்த டெண்டர் 10 நாட்களில் இறுதி செய்யப்படும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாகவும், இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை களைந்து திட்டம் வகுக்கப்படும் எனக் கூறி அவகாசம் கோரினார்.

இதை ஏற்ற நீதிபதிகள், ஜூலை 15ம் தேதிக்குள் இத்திட்டத்தை சமர்ப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 15க்கு தள்ளிவைத்தனர். மேலும், பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தனியார் பார், ஹோட்டல்களும், பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்ப மதுவிலக்கு துறை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

First published:

Tags: Tasmac