முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதால் கைதான ஏபிவிபி அமைப்பு மாணவர்களை சிறையில் சந்தித்ததற்காக அனுப்பிய குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி அரசு மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட பள்ளி மாணவி மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வீட்டை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று, முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த டாக்டர் சுப்பையா சிறைக்கு சென்று சந்தித்தார்.
மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்தனர். அந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதேசமயம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மீதான விசாரணையை 12 வாரங்களில் முடிக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை சார்பில் குற்ற குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இந்த குற்ற குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி டாக்டர் சுப்பையா தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சுப்பையா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி ஏபிவிபி அமைப்பின் மாணவர் சங்கத்தின் தலைவராக 2017 முதல் 2020ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளதாகவும், அது ஒரு அரசியல் இயக்கம் இல்லை என்றும் வாதிட்டார்.
ஆன்லைன் ரம்மியால் தற்கொலை- கேம்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
இதையடுத்து வழக்கு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை மார்ச் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai High court